எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பேன்- ஜோ பிடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்தியாவின் 74-வது சுதந்திரதினவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முன்னணியில் இருந்த நான்தான் பணியாற்றினேன். அப்போது நான் கூறியது, இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புநாடுகளாக மாறினால், கூட்டாளிகளாக இருந்தால், இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும் என்றேன்.

நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், இந்த வார்த்தையை நான் தொடர்ந்து நம்புவேன். இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு பிரச்சினைகளிலும், எல்லைப் பிரச்சினைகளிலும், அச்சுறுத்தல்களிலும் அந்நாட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும், பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம், உலக சுகாதார பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்போம்.

அதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் ஜனநாயகத்தை வலுப்பெறுவதற்கு உழைப்போம். ஏனென்றால் இரு நாடுகளிலும் பன்முகத்தன்மைதான் பரஸ்பர வலிமை. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஆழம் அதிகரிக்கும், இரு நாடு மக்களுக்கு இடையிலான நட்புறவும் வளரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here