பேஸ்புக் விவகாரம்

பேஸ்புக் நிறுவனம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு அந்த கட்சி கடிதமும் எழுதி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் சமூக வலைத்தளத்தில் வார்த்தைப்போர் நடத்தினர். பின்னர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை நீக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘முற்றிலும் தொழில் அல்லாத முறையில் பாராளுமன்ற நிலைக்குழு விவகாரங்களை சசிதரூர் நடத்துகிறார். அவரது அரசியல் செயல்திட்டங்களை பரப்பவே பயன்படுத்துகிறார். இது எனது கட்சிக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சசிதரூரை தொடர்ந்து தலைவராக ஏற்பது சரியாக இருக்காது’ என குறிப்பிட்டிருந்தார்.

எனவே சசிதரூரை விடுப்பில் அனுப்பி பின்னர் வேறொரு உறுப்பினரை இந்த குழுவின் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், நாடாளுமன்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சசிதரூர், தனது சொந்த விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here