வெற்றியை வழங்கும் மல்லிகார்ஜூனேஸ்வரர் திருக்கோவில்

தர்மபுரி நகரின் கோட்டை என்ற பகுதியில் அமைந்திருக்கிறது, மல்லிகார்ஜூனேஸ்வரர் திருக்கோவில். துர்வாசர், காசியபர், அகத்தியர், பரத்வாஜர், கவுசிகர் ஆகிய 5 முனிவர்களாலும், இந்திரன், வருணன், எமன், நிருதி, அக்னி, வாயு, குபேரன் மற்றும் அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பாண்டவர்கள், ஐராவதம் என்னும் வெள்ளை யானை, யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் ஆகியோராலும் வழிபாடு செய்யப்பட்ட தலம் இதுவாகும். இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனேஸ்வரர் என்றும், இறைவி காமாட்சி அம்மன் என்றும் வழிபடப்படுகிறார்கள். இந்த ஆலயம், தேவார வைப்புத்தலங்களில் ஒன்றாக உள்ளது. சிறுவனின் விருப்பத்திற்காக, சிவபெருமானே வேதியர் உருவில் வந்து, அவிர்பாகத்தை வாங்கிய சிறப்புமிக்க கோவில் இது.

கோவில் கருவறையில் சிவலிங்க உருவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார், சதுர பீடமாக அமைந்திருக்கிறது. சிவலிங்கம் 36 தத்துவங்களை உள்ளடக்கிய வகையில் பட்டைகளைக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது. மூலவர் கருவறையின் முன்பாக மகர மண்டபத்தில் இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை பல டன் இருக்கும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இதனால் இவை ‘தொங்கும் தூண்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆலய விதானத்தில் வட்ட வடிவிலான அமைப்பில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி அருள்புரிகிறார். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும். மூலவரின் கருவறை வாசலில் உள்ள கஜலட்சுமி உருவம், இருபுறமும் மாறுபட்ட முறையில் நீர் சொரியும் யானைகளைக் கொண்டதாக இருக்கிறது. இத்தல முருகப்பெருமானும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவர் சபரிமலை ஐயப்பனைப் போல, குந்தணமிட்ட நிலையில் மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். மயிலின் வாயிலும், முருகப்பெருமானின் காலடியிலும் நாகங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள விநாயகர் சன்னிதியில் உள்ள விநாயகர் உருவம் மற்றும் அவரது சன்னிதிக்குரிய விமானம் ஆகியவை ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்கிறது.

பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. அதாவது18 படிகள் கொண்ட உயர்ந்த குன்று அமைத்து அதன்மேல் அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியை 15 யானைகள் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதியில் நீர் தெளித்து வழிபட்டால் நாம் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தின் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தால், ராமாயணக் காவியத்தின் சிறப்புகள் முழுவதும் புடைப்புச் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. கோவில்கள் அடிப்பாகம் ஒளியும், நிழலும் விழுமாறு மேடு பள்ளமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தனுக்கு வழிபாடு நடைபெறுவது போல, இந்தக் கோவிலில் எமதர்மனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு. பவுர்ணமியில் காமாட்சிக்கும், அமாவாசையில் ராஜதுர்க்கைக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here