இந்தியாவின் ஒத்துழைப்பை நாடும் ரஷியா

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ரஷியா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 11-ந் தேதி அறிவித்து உலகை பரபரப்பில் ஆழ்த்தினார்.

ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை பல்லாயிரம் பேருக்கு செலுத்தி சோதிக்கும் 3-வது கட்ட பரிசோதனை நடத்தப்படவில்லை. இந்த தடுப்பூசி பற்றிய முழுமையான தகவல்களை ரஷியா வெளியிட வில்லை என்ற புகாரும் உள்ளது.

ரஷியாவிடம் இந்த தடுப்பூசி பற்றிய தகவல்களை கேட்டு பேசி வருவதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் இந்த தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா நாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது பற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷியா கேட்டிருக்கிறது. மேலும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தவும் கேட்டுள்ளது” என தெரிவித்தன.

இந்த விவகாரத்தை கவனிக்கும்படி, உயிரி தொழில்நுட்ப துறையும், சுகாதார ஆராய்ச்சி துறையும் கவனிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசி குறித்த சில தகவல்களை ரஷியா பகிர்ந்துள்ளது. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷியா அதிகாரபூர்வ கோரிக்கையை விடுத்துள்ளதா? என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை பொறுத்தமட்டில், இந்தியாவும் ரஷியாவும் தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றன. இது தொடர்பான ஆரம்ப கட்ட தகவல்கள் பரிமாறப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தகவல்கள் வரவேண்டியதிருக்கிறது” என முடித்துக்கொண்டார்.

இந்த தடுப்பூசி உற்பத்தி தொடர்பாக முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜயராகவனையும், உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் சுகாதார ஆராய்ச்சி துறை செயலாளர்களையும் ரஷிய தூதர் நிகோலே குதாசேவ் நாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here