அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமான பராசக்தி, பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டிருக்கிறாள். அவள் பண்ணாரி காட்டில் ‘மாரியம்மன்’ என்ற பெயருடன் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறாள். தாமரை பீடத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலய வரலாற்றை இங்கு பார்ப்போம்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது திருக்கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராம மக்கள், தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு வனப்பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப்பகுதிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள். பின்னர் மாலையில் ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.
ஒரு பட்டியிலிருந்த காராம் பசு ஒன்று, பால் கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமலும் தன் கன்றுக்கும் கொடுக்காமலும் இருப்பதை மாடுகளை மேய்ப்பவன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று கவனித்தான். அந்த பசு தன் பாலை தினந்தோறும் ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்குப்புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவிலிருந்து பார்த்தான். இதுபற்றி மாட்டின் உரிமையாளரிடமும், ஊர் மக்களிடமும் கூறினான். மேலும் அந்தப் பசுவின் செய்கையை மறுநாள் அனைவரையும் அழைத்துச் சென்று காட்டவும் செய்தான்.
அந்த காட்சியைக் கண்ட அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். இது தெய்வத்தின் திருவிளையாடல் என்று நினைத்து கைகூப்பித் தொழுதார்கள். மக்கள் அனைவரும் அவ்விடத்தைச் சுத்தம் செய்வதற்காக, முட்புதர்களை அகற்றியபோது அங்கு புற்று ஒன்றும், அதன் அருகில் வேங்கை மரத்தின் அடியில் சுயம்பு லிங்கம் ஒன்றும் இருப்பது தெரியவந்தது. அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் அருள் வந்து, வாக்கு கூறினார். அதில், ‘தான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதி மாடுகளை ஓட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்தச் சூழலில் தங்கிவிட்டேன். என்னை, ‘பண்ணாரி’ எனப் போற்றி வழிபட்டு வாருங்கள்’ என்றார்.
அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணாங்குப் புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்து கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்னர் சிறிய கோவில் அமைத்து, அம்மனுக்கு பத்மபீடத்துடன் திருவுருவம் செய்யப்பட்டது. அம்பிகையை பயபக்தியுடன் துதிக்கும் அன்பர்களுக்கு வேண்டியதை வேண்டிய வண்ணம் அருள்பாலிக்கிறாள். அமாவாசை, ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து அன்னையை வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த திங்கட்கிழமையில் உத்திரம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு பூச்சாற்று நடத்தப்படும். வியாழனன்று மஞ்சள்நீர் உற்சவமும், திருக்கோவிலாரால் அன்னதானமும் நடைபெறும். அன்று அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையன்று மாலை அம்மனுக்கு திருவிளக்குப் பூசை நடைபெறும். மேற்படி பூசையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள்.
இங்கு நடக்கும் குண்டம் திருவிழா சிறப்பு வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இந்த திருவிழா நடந்து வருகிறது. குண்டத்துக்கு தேவையான மரங்கள், குறிப்பிட்ட அளவு காடுகளில் வெட்டப்படுவது வழக்கம். இந்த சடங்கிற்கு ‘கரும்பு வெட்டுதல்’ என்று பெயர். இந்த குண்டத்தில் பருத்தி, மிளகாய், தானியங்கள், சூரைத்தேங்காய்களை போடுகின்றனர். இந்த குண்டத்தில் பக்தர்களுடன் கால்நடைகளும் இறங்குவது சிறப்பு.
இந்த கோவிலில் விநாயகர், பொம்மையராயன் அம்மன் திருச்சன்னிதிக்கு அடுத்த அர்த்த மண்டபத்தில் கோவில் கட்டிடத்தை ஒட்டிய வகையில் மேற்குப் பார்த்த வண்ணமாக பொம்மையராயசுவாமியும், முன் மண்டபத்தில் கிழக்குப் பார்த்த வண்ணமாக விநாயகரும் இடம் பெற்றிருக்கின்றனர். அம்பிகையின் திருக்கோவிலுக்குத் தெற்குப் பக்கத்தில் மேடை மீது மாதேசுவர திருமூர்த்தி எழுந்தருளியுள்ளார். தெப்பக்கிணற்றுக்கு அருகில் மேற்குப் பார்த்த சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் சருகு மகா மாரியம்மன் வீற்றிருக்கிறாள். இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து மைசூர் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரத்தில் பண்ணாரியை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இங்கு செல்லலாம்.