மைக்ரோசாப்ட்டுடன் கைகோர்த்து டிக்டாக்கை..

டிக் டாக்கை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதனுடன் தற்போது வால்மார்ட் நிறுவனமும் கைகோர்த்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து, சீனாவின் டிக்டாக் உட்பட 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதை பின்பற்றி, தனது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, டிக்டாக்கிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சில வாரங்களுக்கு முன் தடை விதித்தார். மேலும், டிக் டாக் செயலியையும், அமெரிக்காவில் அதற்குள்ள சொத்துகளையும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்று விட்டு வெளியேறும்படியும் உத்தரவிட்டார். ஏற்கனவே பல கோடி பயனாளிகளை கொண்ட இந்தியாவிலும் தடை விதிக்கப்பட்டதாலும், ்அமெரிக்காவின் இந்த கெடுபிடியாலும் நெருக்கடியில் தவிக்கிறது டிக் டாக்.

எனவே, வருகிற வரை லாபம் என்று டிக் டாக்கை விற்று விட, அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் டிரம்ப் பரிந்துரைக்கும் ஆரக்கிள் நிறுவனத்துக்கு விற்பனை செய்யவும் பைட் டான்ஸ் விரும்பவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பதற்கு விருப்பம் தெரிவித்து, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் நடப்பதை மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில், டிக்டாக்கின் ஒரு பகுதியை வாங்குவதற்கு வால் மார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மைக்ரோசாப்ட்டுடன் தற்போது இணைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் வால்மார்ட், ஏற்கனவே மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து பல வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமேசான் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, 2018-ம் ஆண்டு முதலே வால்மார்ட்டும், மைக்ரோசாப்ட்டும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனால், இந்த இரண்டு நிறுவனங்களும் டிக்டாக்கை வாங்கி நடத்துவதில் பெரிய சிக்கல்கள் இருக்காது என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். ஆனால், இது பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here