அமெரிக்காவில் உணவு விலை உயர்வு: டிரம்ப் புதிய வரிவிலக்கு அறிவிப்பு

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மாட்டிறைச்சி, தக்காளி, காபி, வாழைப்பழம் உள்ளிட்ட முக்கிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல நாடுகளில் இருந்து வரும் பெரும்பாலான பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. ஆனால் சமீப மாதங்களில் மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நுகர்வோரின் சுமையை குறைப்பதே இந்த வரிவிலக்கின் முக்கிய நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

புதிய வரிவிலக்கு நவம்பர் 20-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, டிரம்ப் நிர்வாகத்தின் இதுவரை பின்பற்றப்பட்ட கொள்கைகளில் ஒரு கணிசமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இறக்குமதி வரி உயர்வு விலைவாசி உயர்வுக்குக் காரணமல்ல என்ற வாதத்தில் டிரம்ப் நிர்வாகம் இதுவரை உறுதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெர்ஜீனியா, நியூ ஜெர்ஸி, நியூயார்க் சிட்டி ஆகிய பகுதிகளில் நடந்த மாநில மற்றும் உள்ளூர்த் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசாரங்களின்போது விலைவாசி உயர்வு முக்கிய பரிசீலனையாக இருந்ததாக அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here