பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்
கோலாலம்பூர் –
நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் நிலைத்திருப்பதற்கு பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால் அதே சமயம் மலாய்மொழியான தேசிய மொழியின் கற்றலையும் அது தொடர்பான கல்வியையும் சீர்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அது கூறியது.
நாட்டிலுள்ள தாய்மொழிப் பள்ளிகளைக் கட்டங்கட்டமாக அகற்ற வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அகமட் ஃபைசால் வான் அகமட் கமால் கூறியிருக்கின்ற நிலையில் தாய்மொழிப் பள்ளிகளுக்கு பாஸ் இளைஞர் பிரிவு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் ஆறு மாத நிறைவை முன்னிட்டு நடந்த மாநாட்டில் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரில் நிஸாம் கிருடின் பேசினார்.
பாலர்பள்ளிக்கூட விஷயம் தொடர்பான தனது நிலைப்பாடும் பாஸ் இளைஞர் பிரிவு நிலைப்பாடும் கடந்த ஈராண்டுகளாக மாறவில்லை என்று கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கைரில் தெரிவித்தார்.
தாய்மொழிப் பள்ளிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. அவை தொடர்ந்து செயல்படட்டும். அதே சமயம் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவர்களுக்கான தேசியமொழிக் கல்வித்தரம் சீர்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஏற்கெனவே உள்ள பள்ளிகள் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். தேசிய மாதிரி தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை எதற்காக நாம் இடிக்க வேண்டும் என்று அவர் கேட்டார்.
தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் தேசியக் கல்வித் திட்டத்தின் தரத்திற்கேற்ப செயல்பட வேண்டும். அவசியம் ஏற்படுமானால் அதனைச் சீர்படுத்த வேண்டும். தாராளமாக இதை அவர்கள் செய்ய வேண்டும் என அவர் சொன்னார். – மலேசியா கினி