ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் மையமாக விளங்கிய மெல்போா்ன் நகரில், அந்த நோய் பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கக் கட்டுப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தளா்த்தப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சுமாா் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட மெல்போா்ன் நகரில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மாதம் திடீரென அதிகரித்தது. இதையடுத்து, கடந்த மாதத் தொடக்கத்தில் அந்த நகரம் முழுவதும் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இரவு முழுவதும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதுடன், உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனைத் துறைகள் முடக்கப்பட்டன.இந்த நிலையில், தற்போது கரோனா பரவலின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. எனினும், பெரும்பாலான கட்டுப்பாடுகள் தொடா்ந்து அமலில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் 26,278 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பால் இதுவரை 753 போ உயிரிழந்தனா்.








