புதிய கல்வி கொள்கை மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும்

மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சான்றிதழாக மாறுவதை தடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் 21ம் நூற்றாண்டில் பள்ளி கல்வி என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 30 ஆண்டுகளில் உலகின் ஒவ்வொரு பிராந்தியமும் மாறியுள்ளது என்று தெரிவித்தார். அனைத்து அமைப்புகளும் மாறிவிட்டன என்றும் ஆனால் நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படியே தொடர்வதாகக் குறிப்பிட்டார்.

21ம் நூற்றாண்டுக்கான திறன்களை மாணவர்களிடையே மேம்படுத்த புதிய கல்வி கொள்கை உதவும் என்றும், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு கற்றலின் அடிப்படை நோக்கம் புரிந்து கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும் என்றும் பிரதமர் மோடி கூறினார். புதிய கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 5 ஆண்டுகளாக இரவு பகலாக உழைக்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் மோடி,

இதனை அமல்படுத்தும் பணியில், ஆசிரியர்கள் அர்பணிப்புடன் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். புதிய கல்விகொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சகம் சார்பில் கருத்து கேட்கப்பட்டபோது அதற்கு 15 லட்சம் கருத்துக்கள் வந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விகொள்கையை செயல்படுத்துவதற்கு இந்த கருத்துகள் உதவும் என்று அவர் தெரிவித்தார். நமது பழைய கல்விமுறை மாணவர்களை மிகவும் இறுக்கி வைத்திருந்தது. அறிவியல் படிக்கும் மாணவன், கலை மற்றும் வணிகவியல் படிக்க முடியாத சூழல் இருந்தது.

பரிட்சை மற்றும் மதிப்பெண் சான்றிதழ், மாணவர்களின் கற்றல் மற்றும் மன வளர்ச்சியை அளவிடும் கருவியா எனக் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, மதிப்பெண் சான்றிதழ் என்பது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் சான்றிதழாக மாறிவிட்டதாகக் கூறினார்.

படிப்பதற்கான ஒரு கருவியே மொழி. மொழி ஒரு கல்வி அல்ல என்று கூறிய பிரதமர் மோடி, எந்த மொழியை ஒரு குழந்தையால் எளிதாக கற்றுக்கொள்ள முடியுமோ, அந்த மொழியே கற்றுலுக்கான மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here