4 விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்திய அல்கொய்தா

செப்டம்பர் 11. அமெரிக்கர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலக மக்களாலும் மறக்க முடியாத நாள். அமெரிக்க வரலாற்று ஏடுகளில் குருதியை சிதறவிட்ட நாளாக மாறிய இந்த தினத்தில் என்ன நடந்தது?

2001 செப்டம்பர் 11. உலகின் ஒரு பகுதியில் சூரியன் மறைந்து கொண்டிருக்க, அமெரிக்காவில் பொழுது விடிந்து காலை 8 மணியை கடந்திருந்தது. நியூயார்க்கின் அடையாள கோபுரமாக வானுயர நின்று கொண்டிருந்த உலக வர்த்தக மைய கட்டடம் அடுத்த சில நிமிடங்களில் கான்கிரீட் இடிபாடுகளாக மாறப் போகும் பயங்கரத்தை அறியாமல் ஏராளமானோர் அ‌ப்பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

சரியாக காலை 8.46 ம‌ணிக்கு வானில் பறந்து வந்த ஒரு விமானம் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தை தகர்த்து தீப்பிழம்புடன் எலும்புக்கூடுகளாக சாலையில் விழுந்தது. எங்கு பார்த்தாலும் அலறல் சத்தம், கொழுந்து விட்டு எரிந்த தீ, சீட்டுக் கட்டு போல சரிந்து கொண்டிருந்த இரட்டை கோபுர கட்டடம் என அடுத்தடுத்த பரபரப்புகள் அரங்கேறின.
வாஷிங்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தி, இரட்டை‌ கோபுரத்தின் மீது‌ மோதி வெடிக்க‌ச் செய்தனர். ஆங்கில திரைப்படங்களை விஞ்சும் அளவுக்கு ‌நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு பாதுகாப்பு அதிகாரிகளே உறைந்து போயிருந்த நிலையில், அடுத்த 18 ஆவது நிமிடத்தில் வாஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட மற்றொரு விமானத்தை கடத்தி காலை 9.03க்கு இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டத்தின் மீது மோதினர் பயங்கரவாதிகள்.

அடுத்தடுத்த தாக்குதலால் வானுயர் கட்டடங்கள் சீட்டுக் கட்டு போல சரியத் தொடங்கின. இடிபாடுகள் விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த அதே நேரத்தில் ராணுவ தலைமையகமான பென்டகன், பென்சில்வேனியாவிலும் அல்கய்தா பயங்கரவாதிகள் விமானங்களை ஓட்டி வந்து தாக்குதல் நடத்தினர். வல்லரசு நாடான அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் அளவுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

4 விமானங்களை கடத்தி, இரட்டை கோபுரத்தை தாக்கி, குடிமக்களையும் கொன்ற அல்கொய்தா பயங்கரவாத தலைவனான ஒசாமாவை பிடித்துக் கொல்ல, அன்றைய தினமே சபதம் மேற்கொண்டது அமெரிக்கா. ஆட்சிகள் மாறினாலும் தேடுதல் பணியை தொய்வில்லாமல் பார்த்துக் கொண்ட அமெரிக்கப் படைகள், பாகிஸ்தானில் மறைந்திருந்த‌ ஒசாமாவை சத்தமே இல்லாமல் தேடிப் பிடித்து கடலில் ஜலசமாதி செய்து தன் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பழி தீர்த்துக் கொண்டது.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா அழிவை சந்தித்திருக்கும் நிலையில், தரைமட்டமான இரட்டை கோபுர பகுதியில் அந்த பயங்கரத்தின் சுவடுகள் மட்டும் அழியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here