இந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அரசுகளும், மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைத்து உள்ளனர்.

இதில் கை கழுவுவதற்கு கிருமி நாசினிகளை (சானிடைசர்) பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த சானிடைசர்கள் சில நேரம் தோலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே எந்த வகையான சானிடைசர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு நிபுணர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

அதன்படி, சானிடைசர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத எத்தில் ஆல்கஹால் அல்லது 70 சதவீத ஐசோபுரொப்பைல் ஆல்கஹால் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் வடிகட்டிய தண்ணீர், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் கிளிசரின் போன்ற அங்கீரிக்கப்பட்ட பொருட்கள் அடங்கி இருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் மெத்தனால் அல்லது 1-புரொப்பனால் அடங்கிய சானிடைசர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என கூறியுள்ள அவர்கள், இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை என எச்சரித்து உள்ளனர். மேலும் உணவு அல்லது குடிக்கும் பானம் இருக்கும் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு உள்ள சானிடைசர்களை, குழந்தைகள் தற்செயலாக குடிக்கக்கூடும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதைப்போல ஆல்கஹாலுக்கு பதிலாக பென்சல்கோனியம் குளோரைடு கலந்த சானிடைசர்களுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொல்லும் திறன் குறைவு என்பதால் அவற்றை வாங்க வேண்டாம் எனக்கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள், மக்கள் சொந்தமாக வீடுகளில் சானிடைசர்கள் தயாரிக்கக்கூடாது எனவும் எச்சரித்து உள்ளனர். ஏனெனில் வேதிப்பொருட்களின் தவறான சேர்க்கையால் தோலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதைப்போல கை கழுவுவதற்கு சோப் மற்றும் தண்ணீர் இல்லாதபோது மட்டுமே சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும் என கொலம்பியா பல்கலைக்கழக நோய்த்தொற்று ஆய்வாளர் பரன் மதேமா கூறியுள்ளார். கிருமிகளை அகற்றுவதற்கு கை கழுவுதல் சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here