17-ந்தேதி மகாளய அமாவாசை – ராமேசுவரம் அக்னி தீர்த்த..

வருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசையையொட்டி அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பணம் செய்யவும், கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் தொடர்ந்து தடை இருந்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற 17-ந் தேதி புரட்டாசி மகாளய அமாவாசை வருகிறது. தை, ஆடி அமாவாசை நாட்களை போன்று புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்றும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

அதனால் வருகிற 17-ந் தேதி அன்று ராமேசுவரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுபோல் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது, வருகிற 17-ந் தேதி புரட்டாசி மகாளய அமாவாசை நாளாகும். அன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர்.

தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி கோவிலுக்குள் ஒருவர் பின் ஒருவராக சென்று வரவேண்டும். பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அன்று ராமேசுவரம் கோவிலில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here