ராணுவத்தினருக்கு நவீன ஆடைகள் தயார்

அண்டை நாடான சீனாவுடனான பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல், போர் மேகம் விலகாமல் இருப்பதால்,எல்லையில் குழப்பமும், பதற்றமும் தொடர்கிறது. அதே நேரத்தில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள,நம் ராணுவம் தயாராகி வருகிறது. எல்லையில் நிலவும் குளிரை சமாளிக்கும் வகையில், நம் ராணுவ வீரர்களுக்கு, நவீன குளிர்கால ஆடைகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.சீனாவின் ராணுவம், காஷ்மீரின் லடாக்கில் உள்ள மலைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து உள்ளது. நம் வீரர்கள் வீரத்துடனும், தீரத்துடனும் செயல்பட்டு, அவர்களை தடுத்து நிறுத்தினர்.கடந்த ஜூன், 15ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தாக கூறப்படுகிறது. ஆனால், அதை சீனா ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது.அதையடுத்து, பிரச்னை தீவிரமானது. ராணுவம் மற்றும் துாதரக நிலையிலான பேச்சு நடந்தது. அதனால், பதற்றம் சற்று தணிந்தது.

ஆனால், இம்மாதம், 7ம் தேதி, சீன ராணுவம் மீண்டும் அத்துமீற முயன்றது. அதை, நம் வீரர்கள் திறம்பட முறியடித்தனர். ஒப்பந்தம்மேலும், சீனா ஆக்கிரமிக்க முயன்ற பல பகுதிகளை மீட்டுள்ளது.தற்போதைய நிலையில், எல்லையில் இரு நாட்டு ராணுவமும், அதிக ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளன. அதனால், போர் மேகம் நீடிக்கிறது.இந்த நிலையில், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சமீபத்தில் நடந்தது.அதில் பங்கேற்ற, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார்.

அப்போது, எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில், ஐந்து அம்ச திட்டங்களை பின்பற்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.தற்போது எல்லையில் நிலவும் சூழல், இரு நாடுகளுக்கும் ஏற்றதாக இல்லை. இதன் காரணமாக, எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்பது உட்பட, அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் கமாண்டர்கள் நிலையிலான பேச்சு, நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அடுத்தக்கட்ட பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சீன மற்றும் நம் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடந்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக எல்லையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இரு தரப்பும் தற்போதுள்ள நிலைகளிலேயே உள்ளன.தொடர்ந்து, நான்காவது நாளாக நேற்றும் எல்லையில் அமைதி நிலவுகிறது. பான்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதியில், இரு தரப்பிலும் தலா, 2,000 வீரர்கள் உள்ளனர்.இந்த நிலையில், பான்காங் ஏரியின் தெற்கே உள்ள, ஸ்பான்குர் காப் பகுதியில், இரு படைகளும், ஒருவரை ஒருவரை துப்பாக்கியால் சுடும் தொலைவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு, சீன ராணுவம் அதிக படைகள் மற்றும் ஆயுதங்களை குவித்துள்ளது.அதையடுத்து, நம் ராணுவமும் கூடுதல் வீரர்கள் மற்றும் தளவாடங்களை அங்கு அனுப்பி வைத்துள்ளது.’பேச்சின் மூலம் தீர்வு காணலாம்; படைகளை விலக்கிக் கொள்வது தான் உடனடி தீர்வு’ என, பேசப்பட்டாலும், கள நிலவரம் அவ்வாறு இல்லை. சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருவதால், போர் அபாயம் குறையவில்லை.

அதனால் பதற்றமும், குழப்பமும் நிலவி வருகிறது.வெப்பநிலைஇந்த நிலையில், குளிர்காலம் துவங்கியுள்ளது. அங்கு மிக விரைவில், பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவும் சூழ்நிலை உள்ளது. அதனால், குளிரை தாங்கும் வகையில், அங்கு முகாமிட்டுள்ள வீரர்களுக்கு சிறப்பு ஆடைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.சியாச்சின் மலைப் பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்படும் உடைகள், ஷூ உள்ளிட்டவை, இங்கும் அனுப்பப்பட்டுள்ளன.அதைத் தவிர, குளிரை சமாளிக்கக் கூடிய கூடாரங்களும் அனுப்பப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் ஏற்படும் உடல் பிரச்னைகளை சமாளிக்கத் தேவையான மருந்துகள்உள்ளிட்டவையும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.கடும் குளிர் துவங்கினால், பனிச் சரிவு ஏற்படும் என்பதால், லடாக் எல்லைக்கு செல்லும் நெடுஞ்சாலை மூடப்பட்டு விடும்.

அதற்குள் தேவையான பொருட்களை அனுப்ப, ராணுவம் தீவிரமாக உள்ளது.அதேபோல், குளிர் காய்வதற்கு தேவையான,’புக்காரி’ என்ற சாதனமும், அதற்கு தேவையான மண்ணெண்ணெயை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அடுத்த கூட்டம் எப்போது?எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கவும், படைகளை விலக்கிக் கொள்ளவும், இரு ராணுவத்தின் கமாண்டர்கள் நிலையிலான பேச்சு நடந்தது. ஆனால், அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், ‘அடுத்தக்கட்ட பேச்சு நடத்துவது’ என, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்படும் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் பேச்சு எப்போது நடத்துவது என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யப்பட வில்லை.’இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான பேச்சின்போது இறுதி செய்யப்பட்ட, ஐந்து அம்ச திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக, இந்தப் பேச்சு நடக்க உள்ளது. அதனால், மிக விரைவில் இந்த சந்திப்பு இருக்கும்’ என, ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here