டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை தேவைக்கு ஏற்ப 59-ஆக நீட்டிக்கலாம். இது பணி விதிகள் மற்றும் அரசாணையை மீறியதாகாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் விஸ்வநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோர், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59- ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை அடிப்படையில் தங்களின் ஓய்வு வயதை 59 ஆக நீட்டிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், டாஸ்மாக்கில் இரு விதமான ஊழியர்கள் பணியில் உள்ளனர். அதிகாரிகள், நிரந்தர பணியாளர்கள் (நேரடி நியமனம் அல்லது பிற துறைகளில் இருந்து வந்தவர்கள்) ஒரு பிரிவாகவும், தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மற்றொரு பிரிவாகவும் உள்ளனர்.
நிரந்தர ஊழியர்களின் ஓய்வு வயது அரசாணைப்படி 59 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையை ஒப்பந்த ஊழியர்கள் கோர முடியாது. பணி விதிகள்படி ஒப்பந்த பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணிலிருந்து நீக்கலாம் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் நிரந்தர ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆகவும், நேரடியாக நியமிக்கப்பட்ட இரவுக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆகவும் உள்ளது.
இதனால், டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை தேவைக்கு ஏற்ப 59-ஆக நீட்டிக்கலாம். இது பணி விதிகள் மற்றும் அரசாணையை மீறியதாகாது.
எனவே, டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் பரிசீலிக்க வேண்டும்.
வயது வரம்பு உயர்த்துவதை, அந்த வயது வரை தங்களுக்கு கட்டாயம் பணி வழங்க வேண்டும் என்பதற்கான உரிமையாக கருத முடியாது. டாஸ்மாக்கில் 58 வயது முடிந்தவர்களுக்கு தேவைக்கு ஏற்ப 59 வயது வரை பணி நீட்டிப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.