பெனாம்பாங்கில் கத்திக்குத்து; பதினாறு வயது சிறுமிக்குக் கழுத்தில் பலத்த காயம்

கோலாலம்பூர்:

ம்போங் துந்துலுக், நோசோப் (Kampung Tuntuluk, Nosoob) பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், 16 வயது வெளிநாட்டுச் சிறுமி ஒருவரின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

இன்று மதியம் சுமார் 12:30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அவருக்கு அறிமுகமான நபர் ஒருவர் அணுகியதாகத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தாக்குதலில் சிறுமியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில், “தகவல் அறிந்து நான் வீட்டிற்குச் சென்றபோது, ஒரு நபர் வீட்டின் முன்னால் உள்ள குன்றின் மீது ஓடுவதைக் கண்டேன். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் அந்தச் சிறுமி குளியலறையில் கிடந்தார்.”

பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது சகோதரியுடன் அந்த வீட்டில் வசித்து வருவதாகவும், சம்பவத்தின் போது தனது சகோதரியின் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 30 வயது மதிக்கத்தக்க ஒருவரைப் பிடிப்பதற்குப் பெனாம்பாங் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறுமி தற்போது குயீன் எலிசபெத் (Queen Elizabeth I) மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பெனாம்பாங் மாவட்ட தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை மூத்த அதிகாரி ஏஎஸ்பி ஹைரி அவாங் அகுப் (016-803 2849) என்பவரைத் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறைத் தலைவர் சாமி நியூட்டன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here