`பல மொழி, கலாசாரங்களை கொண்டது இந்தியா`

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தினமணியின் செய்தி.

புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி, மத்திய அமைச்சராக இருந்த 2014-ஆம் ஆண்டில் அவரது காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தமிழ்நாடு விடுதலை படையைச் சோந்த கலைலிங்கம் உள்ளிட்ட பலரை கைது செய்தனா். புதுச்சேரி சிறையில் உள்ள கலைலிங்கம் ஜாமீன் கோரி புதுச்சேரி முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கலைலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆா்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அண்மையில் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தில்கூட சீனாவை இங்குள்ளவா்கள் வெளிப்படையாக ஆதரித்தனா். இதுபோன்ற நபா்களை ஆரம்பத்திலேயே ஓடுக்க வேண்டும். மனுதாரா் அமைப்பு வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி விடுதலை கோரிக்கை மையமாக உள்ளது. இதுபோன்ற கொள்கைகளைக் கொண்ட அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்பு என்ற முகக் கவசத்துடன் சுதந்திரமாக செயல்படுகின்றன. தமிழகத்தில் தமிழ் கலாசாரம், தமிழ்மொழி, தமிழ் இனம் என்ற ஆயுதங்களுடன் பல அமைப்புகள் உள்ளன. இந்த ஆயுதங்களை கையில் தூக்க பல அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன.

நமது நாடு பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாசாரங்களைக் கொண்டது. இவை அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது என்ற எண்ணத்தையே அரசு மக்களிடம் உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழக மாதிரி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நேற்று தொடங்கியது. மாணவர்கள் சிலருக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சிக்கல் உண்டானது என்கிறது தினத்தந்தியின் செய்தி.

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 22-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. 22-ந்தேதி புராஜெக்ட், நேர்காணல் தேர்வும், 24-ந்தேதி முதல் செமஸ்டர் தேர்வும் நடக்கிறது.

முதல் முறையாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட இருப்பதால், மாணவர்கள் அதுபற்றி தெரிந்து கொள்வதற்காக மாதிரி தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து இருந்தது.

அதன்படி நேற்று மாதிரி தேர்வு தொடங்கியது. இன்றும் தேர்வு நடைபெற உள்ளது. இந்த 2 நாட்களிலும் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நடக்கும் மாதிரி தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மாதிரி தேர்வு சரியான நேரத்துக்கு தொடங்கப்பட்டாலும், மாணவர்கள் சிலருக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சிக்கல் உண்டானது. ‘வெப் கேமரா’ சரிவர செயல்படாமல் போனது, சிலருக்கு ‘பிரவுசர்’ சரியாக இல்லை என்ற தகவல் வந்தது.

இருப்பினும் பல மாணவர்கள் மாதிரி தேர்வை சரியாக எழுதினர். அவர்கள் சரியாக எழுதியதை சம்பந்தப்பட்ட பேராசிரியர்களுக்கு ‘ஸ்கிரீன்சாட்’ எடுத்து அனுப்பினார்கள்.

நேற்று முன்தினம் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடங்கப்படாமலேயே போனது. 2-வது நாளாக நேற்று மாதிரி தேர்வு சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிலையில், விடைத்தாள் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர் என விவரிக்கிறது அச்செய்தி.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்துவருகின்றன. அதன்படி, கடந்த மாதத்தில் 843 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 821 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி, பாக்டீரியா தொற்று தடுப்புக்குபயன்படுத்தப்படும் 22 மருந்துகளும், கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகள் சிலவும் தரமின்றி இருந்தது தெரியவந்தது என்கிறது இந்து தமிழ் திசையின் செய்தி.

மேலும், இதில், பெரும்பாலானவை இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தமருந்துகளின் விவரம் https://cdsco.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் விவரிக்கிறது அச்செய்தி.

ஒரு கட்டத்தில் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளான அம்பட்டி ராயுடு, அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்றைய போட்டியில், இக்கட்டான சூழலில் இருந்து தனது அணியை மீட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here