நாட்டில் முதல் முறையாக துப்பாக்கி தயாரிப்பில் வெளிநாட்டு நிறுவனம்

இந்தியாவில் துப்பாக்கி தயாரிப்பில் முதல் முறையாக பிரபல வெளிநாட்டு நிறுவனம் கால் பதிக்கிறது. இங்கிலாந்தின் பழம்பெரும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான, ‘வெப்லி அண்ட் ஸ்காட்’ கடந்த 1790ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இதன் தயாரிப்பு ஆயுதங்கள் இரண்டு உலகப் போர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனம் 15 நாடுகளுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து தருகிறது. இதன் .32 ரக துப்பாக்கிகள் கைத்துப்பாக்கிகளின் ஒரு அடையாளமாக திகழ்ந்தவை. உலக அளவில் புகழ்பெற்ற இந்நிறுவனம் இந்தியாவின் தனது ஆலையை தொடங்க கடந்த 2017ல் முயற்சிகள் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து 2019ல் அனுமதி கிடைத்தது. இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சியால் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கைத்துப்பாக்கிகளை வெப்லி அண்ட் ஸ்காட் தயாரிக்க உள்ளது. இதற்காக லக்னோ அருகே சாண்டிலா தொழிற்பேட்டையில் புதிய ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெப்லி அண்ட் ஸ்காட் நிறுவனர் ஜான் பிரைட் கூறுகையில், ‘‘முதல்கட்டமாக இந்தியாவில் .32 ரக ரிவால்வர்கள் உற்பத்தி செய்யப்படும். பிறகு சந்தை வரவேற்பைப் பொறுத்து பிஸ்டல்கள், ஏர்கன், ஷாட்கன்கள் தயாரிக்கப்படும்.
1899ல் பிரபலமாக இருந்த மார்க் IV .32 கைத்துப்பாக்கி இந்திய சந்தையை அலங்கரிக்கும்’’ என்றார். சியால் நிறுவனத்தின் ஜோகிந்தர் பால் சிங் கூறுகையில், ‘‘மத்திய அரசின் ஆதரவாலும், மேக் இன் இந்தியா திட்டத்தினாலும் இந்த முயற்சி கைகூடி உள்ளது,’’ என்றார். இந்நிறுவனம் வரும் நவம்பரில் இருந்து உற்பத்தியை தொடங்க இருக்கிறது. இந்தியாவில் கைத்துப்பாக்கி தயாரிப்பில் கால்பதிக்கும் முதல் வெளிநாட்டு நிறுவனம், ‘வெப்லி அண்ட் ஸ்காட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலை மட்டுமே கைத்துப்பாக்கிகளை தயாரித்து வந்தது. தற்போது, வெப்லி அண்ட் ஸ்காட் வருகையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பை தாங்கள் வழங்கப் போவதாகவும் வெப்லி அண்ட் ஸ்காட் நிறுவனம் கூறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here