சுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசு அதிகாரியின் உடலைத் தேடி, அந்த நாட்டுக் கப்பல்கள் தங்களது கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வட கொரிய கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு அதிகாரியின் உடலைத் தேடி, தென் கொரியக் கப்பல்கள் அத்துமீறி அந்த எல்லைக்குள் நுழைந்தன. இதுபோன்ற ஊடுருவலை தென் கொரியா உடனடியாக நிறுத்த வேண்டும். அப்போதுதான் இரு தரப்பு பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்படும். தென் கொரியாவின் ஊடுருவல் அண்மையில் நடைபெற்றதைப் போன்ற விரும்பத் தகாத சம்பவம் மீண்டும் ஏற்படுவதற்கு வழிவகுத்திருக்கக் கூடும் என்று அந்த செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில், சட்டவிரோதமாக மீன் பிடிக்கப்படுவதைக் கண்டறிவதற்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு அரசு அதிகாரி, எரிந்த நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டதாகவும், வட கொரிய ராணுவம் அவரை சுட்டுக் கொன்று உடலை எரித்ததாகவும் தென் கொரியா கட்நத வியாழக்கிழமை கூறியது. இந்தச் சம்பவம் குறித்துட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் வருத்தம் தெரிவித்ததாக அவரது ஆலோசகா் சூ ஹூன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். அதையடுத்து, இந்தச் சம்பவம் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் தணியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில், வட கொரியா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.