நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் தொலைப்பேசியில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ‘திரைப்பட நடிகர் சூர்யாவின் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும்’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

ஏற்கனவே நீட் விவகாரத்தில் சூர்யா அறிக்கையை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் சூர்யாவை விமர்சித்து வருகின்றனர். இந்து முன்னணி அமைப்பினர் அவரது உருவப்பொம்மையை எரிந்து போராட்டம் நடத்தியதால், போலீசார் உடனே களத்தில் இறங்கினர்.

அதன்படி வெடிகுண்டு மிரட்டல் குறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஆழ்வார்ப்பேட்டை சீத்தாம்மாள் காலனி 2வது தெருவில் இருந்த நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு சென்றனர்.

ஆனால் நடிகர் சூர்யா தனது அலுவலகத்தை கடந்த 6 மாதத்திற்கு முன்பு அடையாருக்கு மாற்றியது தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மிரட்டல் விடுக்கப்பட்ட இடத்தை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது.

அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் 9344020751 என்ற செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ்(28) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் மரக்காணம் போலீசார் உதவியுடன் புவனேஷை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் புவனேஷை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது, இவர் ஏற்கனவே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய், நடிகர் அஜித் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here