நான் மது குடிப்பதில்லை -அனில் அம்பானி

நான் மது அருந்துவதில்லை,” என, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, 61, தெரிவித்து உள்ளார். பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம், 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன. இக்கடனுக்காக, அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி, சீன வங்கிகள், லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. சமீபத்தில், இவ்வழக்கின் குறுக்கு விசாரணை நடந்தது; அப்போது, அனில் அம்பானி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக அளித்த வாக்குமூலம்: என்னிடம் தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை. வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த ஓவியங்கள், என் மனைவிக்கு சொந்தமானவை. ஆடம்பர படகு, என் குடும்பத்தைச் சேர்ந்தது. எனக்கு, கடல் காற்று அலர்ஜி. அதனால், நான் படகில் செல்வதில்லை. நான் தனிப்பட்ட உத்தரவாதம் எதையும், யாருக்கும் அளிக்கவில்லை.

என் தாயிடம், 525 கோடி ரூபாய்; மகனிடம், 300 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளேன். என் பெயரில் உள்ள, ‘கிரெடிட் கார்டுகள்’ வாயிலாக, என் தாயார் ஆடம்பரப் பொருட்களை வாங்கியதற்கு, நான் பொறுப்பாக முடியாது. ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில், நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக கூறுகின்றன. அதில் உண்மையில்லை.

நான், மிக எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ஓடுவது எனக்கு பிடிக்கும். எனக்கு மது அருந்தும் பழக்கமில்லை. புகை பிடிப்பதில்லை. ஆன்மிகத்தை பின்பற்றி, சைவ உணவு உண்கிறேன். என்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை; தவறானவை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here