கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதலாகவே இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை தணிப்பதற்காக நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை.
தற்போது லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, அங்கு பதற்றமான சூழல் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “லடாக்கை பொறுத்தவரை, அங்கு ‘போரும் இல்லை; அமைதியும் இல்லை’ என்ற சூழ்நிலையே நிலவி வருகிறது.
எதிரிகளின் எந்தவிதமான அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. ரபேல், தேஜாஸ் போர் விமானங்களின் இணைப்பு காரணமாக, நமது விமானப் படை பெரும் பலத்துடன் இருக்கிறது. அங்கு எதிரிகளின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்திய விமானப் படை தகுந்த பதிலடி கொடுத்துள்ளது என்றார்.