பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த மருத்துவர் கே.வி.திருவேங்கடம் மறைவு

நாட்டின் தலைசிறந்த மூத்த மருத்துவரான கே.வி.திருவேங்கடம் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.

மருத்துவத் துறையில்’கே.வி.டி’ என்று அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்டவர் பிரபல மருத்துவர் கே.வி.திருவேங்கடம் (94). உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலை காலமானார்.

இந்திய அளவில் தலைசிறந்த மூத்த மருத்துவர்களில் ஒருவராக விளங்கியவர் திருவேங்கடம். பொது மருத்துவம், நுரையீரல், அலர்ஜி, ஆஸ்துமா என பன்முக சிகிச்சை நிபுணரான இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 ஆண்டுகள் மருத்துவர், பேராசிரியராக பணியாற்றியவர்.

அரசு மருத்துவராக பணியாற்றியபோது, தனது குழுவினருடன் இணைந்து ஆராய்ச்சி மூலம் சிக்குன்குனியாவை முதலில் கண்டுபிடித்தவர். டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்துகண்டுபிடித்து சாதனை படைத்தவர். பல்வேறு நாடுகளுக்கு சென்று நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை அறிந்த பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்வதையே உயிர்மூச்சாக கொண்டிருந்தார்.

மருத்துவத் துறையில் சிறந்த சேவைக்காக பத்மஸ்ரீ, பி.சி.ராய் விருது, சிறந்த ஆசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர், தன்வந்திரி விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

திருவேங்கடம் குறித்து அப்போலோ மருத்துவமனை அலர்ஜி சிகிச்சை மருத்துவர் பஷீர் அகமது கூறியபோது, ”அலர்ஜிக்கு அவர் அறிமுகப்படுத்திய சிகிச்சையைத்தான் இன்றும் பின்பற்றுகிறோம். எம்ஜிஆரின் குடும்ப மருத்துவராக இருந்தார். கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது, இவரை அரசே அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி மருத்துவம் படித்தபோது, அவருக்கு ஆசிரியராக இருந்தவர்.

உலக அளவில் தலைசிறந்த மருத்துவராக விளங்கிய கே.வி.திருவேங்கடத்தின் மறைவு மருத்துவத் துறைக்கு மாபெரும் இழப்பு” என்றார். மருத்துவர் திருவேங்கடம் சென்னை தி.நகரை சேர்ந்தவர். இவரது மனைவி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் உயிரிழந்தார். திருவேங்கடத்துக்கும் கரோனாதொற்று இருந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here