18 நாட்களில் 10 லட்சம் பேர் திமுகவில் இணைந்தனர்

இணையதளம் மூலம் 18 நாட்களில் 10 லட்சம் பேர் புதிதாக திமுகவில் உறுப்பினராக இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இணைய வழியில் திமுக உறுப்பினரை சேர்க்க ‘எல்லோரும் நம்முடன்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு மூலம் அக்.8-ம் தேதி, 10 லட்சம் புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. இணைந்த புதிய உறுப்பினர்களில் 53 சதவீதம் பேர் இளைஞர்கள். மக்கள் விரோத அதிமுக ஆட்சியை அகற்றி, 2021-ல் திமுகவின் ஆட்சி உதித்திட தமிழகமே அலை அலையாய் ஆர்ப்பரிக்கிறது. இது ஒரு புதிய விடியலுக்கான தொடக்கம்” என்று கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த செப். 15-ம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இணையதளம் மூலம் திமுக உறுப்பினராகும் வசதியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிதாக உறுப்பினராக சேர விரும்புவோர் திமுகவின் www.dmk.in என்ற இணையதளத்துக்குச் சென்று செல்போன் எண்ணை பதிவிட்டால் ஓடிபி எண் வரும். அதன் மூலம் உள்ளே சென்றால் ஒரு படிவம் வரும்.

அதில் பெயர், பாலினம், தந்தை அல்லது கணவர் பெயர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, மாநிலம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி, ஊராட்சி வார்டு, அஞ்சல் குறியீட்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய தகவல்களை இட வேண்டும். புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் கடந்த 18 நாட்களில் 10 லட்சம் பேர் திமுகவில் இணைந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here