குளிர்காலம் வந்து விட்டதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம்

‘குளிர்காலத்தில் மனிதர்களின் சுவாச நீர்த்துளிகள் எளிதாக ஆவியாகாமல் நீண்ட நேரம் காற்றில் மிதக்கும் என்பதால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது,’ என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  அமெரிக்காவின், ‘நானோ லெட்டர்ஸ்’ என்ற இதழில் ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில், தற்போது தொடங்கவுள்ள குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்பட்டு வரும் சமூக இடைவெளி வழிகாட்டுதல்கள், குளிர்கால கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்கு போதுமானது கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் துணை ஆசிரியர் யான்யிங் ஜூ கூறுகையில், “நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைத்துள்ள சமூக இடைவெளியான 6 அடி தூரத்தை விட சுவாச நீர்த்துளிகள் அதிக தூரம் பயணிப்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது,” என்றார். குளிர் காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால், சுவாச நீர்த்துளிகள் தரையில் விழுவதற்கு முன்பாக 6 மீட்டர் முதல் 19.7 அடி தூரம் வரை  பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளன. இதுபோன்ற குளிர்கால சூழல்களில் வைரஸ்கள், காற்றில் தொடர்ந்து அதிக நேரம் மிதக்கும். குறிப்பாக, பல நிமிடங்களில் இருந்து ஒரு நாள் வரை கூட வைரஸ்கள் காற்றில் மிதக்கக் கூடும்.

மக்கள் சுவாசிப்பதன் மூலமாக இந்த வைரஸ்கள் உள்ளே செல்லக்கூடும். எனவே, தொற்று பரவுவதை தடுக்க, மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகைள மேற்கொள்ள வேண்டும். அறை குளிர்ச்சியாகவும், ஈரப்பதமாகவும் இருந்தால் அதிக சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்றும் ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

73 லட்சத்தை கடந்தது
* இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக 67,708 பேர் பாதித்துள்ளதால், மொத்த பாதிப்பு 73,07,097 ஆக உயர்ந்துள்ளது.
* 63,83,441 பேர் குணமடைந்து இருப்பதால், குணமடைவோர் சதவீதம் 87.35 ஆக அதிகரித்துள்ளது.
* புதிதாக 680 பேர் தொற்றுக்கு பலியானதைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,11,266 ஆக உள்ளது. தற்போது 8,12,390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாடு முழுவதும் இதுவரையில் 9 கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் மகனுக்கு கொரோனா
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய உதவியாளர் ஹோம் ஹிக்ஸ், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் வைரஸ் தொற்று பரிசோதனை செய்தனர். இதனை தொடர்ந்து, இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த 1ம் தேதி உறுதிபடுத்தப்பட்டது. மெலனியா வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் 14 வயது மகன் பாரன் டிரம்புக்கு அறிகுறியற்ற நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மெலனியா கூறுகையில், “எனது பயம் உண்மையாகி விட்டது. எனது மகனுக்கு மீண்டும் சோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவன் வலிமையான பதின்பருவத்தை கொண்டுள்ளான். ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு இல்லை,” என்றார்.

பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் திறப்பு
நாடு முழுவதும் 8,750 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் 3,100 மல்டிபிளக்ஸ் எனப்படும் தியேட்டர்களாகும். மற்றவை தனி தியேட்டர்களாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் 7 மாதங்களாக நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில், அக்டோபர் 15ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்து புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, புதுச்சேரி, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன.
விதிமுறைகளை பின்பற்றி அவை அவ்வபோது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. தியேட்டருக்கு வந்த மக்களுக்கு வெப்ப பரிசோதனை போன்றவை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here