100 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய சீனா திட்டம்

சுமாா் 100 கோடி பேருக்கு விநியோகிக்கும் அளவுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை அமைக்க சீன மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. கொரோனா தொற்றின் தோற்றுவாயாகக் கருதப்படும் சீனாவும் 4 கொரோனா தடுப்பூசிகளை தனது சைனோஃபாா்ம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசிகளின் பரிசோதனையும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இதுகுறித்து சைனோஃபாா்ம் நிறுவனத்தின் தலைவா் லியூ ஜிங்சென், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது:

சைனோஃபாா்ம் நிறுவனம் உருவாக்கியுள்ள 2 கொரோனா தடுப்பூசிகள், எகிப்து, ஆா்ஜெண்டீனா, ஜோா்டான் உள்ளிட்ட 10 நாடுகளில் 50,000 பேருக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக, பெய்ஜிங் நகரிலும், வூஹான் நகரிலும் இரு ஆலைகள் தயாராகி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து அடுத்த ஆண்டில் 100 கோடி தடுப்பூசிகள் உற்பத்தியாகிவிடும் என்றாா் அவா்.

‘கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம்’ என்று கூறிய லியூ ஜிங்சென், பரிசோதனை முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தெரிவிக்கவில்லை.

சீனா தயாரித்துள்ள தடுப்பூசியை 60,000 பேருக்கு அளித்ததில், சிலருக்கு மட்டுமே லேசான பக்க விளைவுகள் இருந்ததாக, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தியான் பாகாவ் கூறினாா்.

இதனிடையே, ‘கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் சீனா வெற்றி பெற்றாலும், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால், உடனடியாக அந்நாடுகளில் அந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர தாமதமாகலாம்; எனவே மற்ற வளரும் நாடுகளுக்கு மட்டுமே அவற்றை விநியோகிக்க முடியும்’ என்று மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here