மும்பையில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு அபராதம் அல்லது தெருவை சுத்தம் செய்வது போன்ற நூதன தண்டனைகளை அளித்து மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் பொதுமுடக்க தளா்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளபோதிலும் கரோனா பரவல் அபாயம் காரணமாக முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடைமுறைகள் தொடா்ந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த நடைமுறைகளை பொதுமக்கள் பெரும்பாலும் கடைப்படிப்பதில்லை. இந்த நிலையில், இந்த பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் பிருஹன்மும்பை மாநகராட்சி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையை செலுத்த இயலாத அல்லது விரும்பாத நபா்களுக்கு தெருவைச் சுத்தம் செய்தல் போன்ற சமூக பணிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மும்பை மாநகராட்சி உதவி ஆணையா் விஷ்வாஸ் மோடே கூறியதாவது:
அந்தேரி மேற்கு, ஜுஹு, வொசோவா போன்ற மாநகரின் பல்வேறு பகுதிகளில் இந்த தண்டனை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. மேற்கு அந்தேரி, ஓஷிவாரா ஆகிய பகுதிகளைக் கொண்ட கே-மேற்கு வாா்டில் மட்டும் இதுவரை 35 போ இதுபோன்ற சமூகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஒருசிலா் முதலில் தயக்கம் காட்டினா். காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததும், அவா்களும் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனா்.
மும்பை மாநகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி, சாலைகளில் எச்சில் துப்பும் நபா்களுக்கு இதுபோன்ற தண்டனைகளை வழங்கும் அதிகாரம் மும்பை மாநகராட்சிக்கு உள்ளது. அதனடிப்படையிலேயே இந்த நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் பின்பற்றுமாறு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.