மும்பையில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் முக கவசம் அணியாதவர்களை சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஒரேநாள் நடத்திய சோதனையில் 9 ஆயிரத்து 107 பேர் முகக்கவசம் இன்றி நடமாடியது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த மார்ச் முதல் இதுவரை மாநகராட்சியினருக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் வரை வசூலாகி உள்ளது.
முக கவசத்தின் அவசியத்தை உணர்த்த மாநகராட்சி இதற்காக ரூ.20 லட்சம் செலவில் விழிப்புணர்வு செய்து வருகிறது. பொதுஇடங்களில் முககவசம் இன்றி உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. முககவசம் இன்றி நடமாடியவர்களிடம் இருந்து மாநகராட்சி தற்போது ரூ.200 அபராதம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.