பாசீர் கூடாங்:
செனாய்-டெசாரு விரைவுச்சாலையில் (SDE) இன்று அதிகாலை பசுவின் மீது கார் மோதி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 3:10 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகப் பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் துணைத் தீயணைப்பு கண்காணிப்பாளர் ஃபெர்டாவுஸ் அஹமட் தெரிவித்தார்.
37 வயதுடைய இரு ஆடவர்கள் பயணித்த ‘Proton Satria’ ரக கார், டெசாரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது குறுக்கே வந்த பசுவின் மீது மோதியுள்ளது. அதன் பின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் தடுப்புச் சுவரில் பலமாக மோதியதாக நம்பப்படுகிறது.
விபத்தின் தீவிரத்தால் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவரை மீட்புக் குழுவினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்டனர். இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
படுகாயமடைந்த மற்றொருவர் உடனடி முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
























