டிரம்ப் பேரணியால் 700 பேர் உயிரிழப்பு:30,000 பேரை…

டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டவர்களில் 30 ஆயிரம் பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு, 700 பேர் வரை இறந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலகல் மட்டுமே, அதில் இருந்து தப்புவதற்கான தற்போதைய ஒரே தீர்வாக உள்ளது. ஆனால், இத்தகைய நெருக்கடியான சூழலில் அமெரிக்க தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் உற்சாகத்தில் நோய்த் தொற்று அபாயத்தை மறந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். இதன் பின்விளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது.

இதற்காக, கடந்த ஜூன் 20ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரையிலான காலக் கட்டத்தில் டிரம்ப் நடத்திய 18 பிரசார பேரணிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ‘பெரும் கூட்டங்களின் பின் விளைவு’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், டிரம்பின் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற 30 ஆயிரம் பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும், அவர்களில் 700 பேர் உயிரிழந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது பற்றி ஆய்வுக் குழுவினர் கூறுகையில், ‘‘அரசாங்கங்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் இதுபோன்ற கூட்டங்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..

குறிப்பாக, மாஸ்க் அணிவதை தவிர்ப்பவர்களாலும், சமூக இடைவெளியை மறந்தும் இதுபோல் கூடுகிறவர்களால் எல்லோருக்கும் ஆபத்து காத்திருக்கிறது,’’ என்றனர். இது குறித்து டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘டிரம்ப் யாரைப் பற்றியும் கவலைப்படுகிறவர் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். தனது ஆதரவாளர்களைப் பற்றியே அவர் கவலைப்படவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் புரிகிறது,’ என்று விமர்சித்துள்ளார்.

* உள்நோக்கம் கொண்டது
இந்த ஆய்வு பற்றி டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘இது அரசியல் பின்னணி கொண்ட ஆய்வு. டிரம்ப் நடத்திய கூட்டங்களால் மட்டுமே தொற்று பரவியது என்பது போன்ற கருத்தை ஆராய்ச்சியாளர்கள் சித்தரித்துள்ளனர். ஜோ பிடனும், கமலா ஹாரிசும் நடத்திய கூட்டங்களிலும் இதே அளவிலான பின்விளைவுகள் இருக்கலாம். அதனை ஏன் இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இதற்கு, பிடென் ஏன் உடனடியாக கருத்து தெரிவிக்கிறார்?,’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here