கொரோனா சிகிச்சை மையங்களில் மனநல ஆலோசனை வசதி

கொரோனா தொற்று உடல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி மனநலத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தால் கொரோனா நோயாளிகள் பலர் மனநல பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டு உள்ளது.

எனவே கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:-

இந்த கொரோனா காலத்தில் குறைந்தபட்சம் 3 வகையான பிரிவினர் மனரீதியாக பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி மன அழுத்தம் (கொரோனா நோயாளிகளில் 30 சதவீதத்தினர் பாதிப்பு) மற்றும் பிந்தைய மன உளைச்சல் சீர்குலைவு அறிகுறிகள் (96 சதவீதத்தினர்) மிக அதிகமாக இருக்கலாம் என கண்டறியப்பட்டு உள்ளது.

2-வதாக ஏற்கனவே மனநல குறைவாடுகள் கொண்டவர்கள், தொற்று நோய்களின்போது மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவர் அல்லது அவற்றின் அறிகுறிகள் மோசமடையக்கூடும். 3-வது பிரிவினரிடம், கவலைகள் (லேசானது முதல் கடுமையானது வரை), மன உளைச்சல், மனச்சோர்வு, மனஅழுத்த அறிகுறிகள், தூக்கமின்மை, பிரமைகள், சித்தப்பிரமை மற்றும் தற்கொலை எண்ணம் உள்ளிட்ட பல்வேறு வகையான மன நல அறிகுறிகள் தொற்று நோய்களின் போது கண்டறியப்படுகின்றன.

இதைத்தவிர வாழ்க்கைமுறை கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள், குழந்தைகள் பற்றிய கவலை, வேலையின்மை மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் பற்றிய கவலை, குடும்ப வன்முறை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளும் கண்டறியப்பட்டு உள்ளன.

இப்படி கொரோனா தொற்று, சுகாதார வசதிகளில் மிகுந்த சிரமத்தையும், மனநல சிகிச்சையில் தனித்துவமான சவால்களையும் ஏற்படுத்தி விட்டது. இதனால் கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மனநல வல்லுனர்களுக்கு தொற்றை தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்து சிறப்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.

எனவே ஒவ்வொரு கொரோனா சிகிச்சை மையத்திலும் மனநல வல்லுனருடன் நேரடியாகவோ, தொலைதொடர்பு மூலமோ ஆலோசனை பெறுவதற்கான வசதி இருக்க வேண்டும். மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை தொற்றுக்காக அனுமதிக்கப்படும்போது ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை இன்றி, எந்தவொரு மனநல மருந்துகளும் திடீரென நிறுத்தக்கூடாது. உயிருக்கு ஆபத்தான அவசர நிலை என்றால் தவிர்க்கலாம்.

அவருக்கு ஒதுக்கப்படும் படுக்கை நர்சிங் ஸ்டேசனுக்கு அருகில் இருக்கும் வகையிலும், 24 மணி நேரமும் மருத்துவ பணியாளர்கள் அவரை கண்காணிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். மேலும் சுயமாகவோ, அடுத்தவர் மூலமோ அவருக்கு தீங்கு விளைவிக்கும் கருவிகள் எதுவும் அருகில் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கவச உடை, சமூக இடைவெளி போன்றவை கடைப்பிடிப்பது குறித்து எளிய மொழியில் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அவரது உடல் மற்றும் மனநலன் குறித்து அவரை கவனிப்போரிடம் தினமும் தெரிவிக்க வேண்டும்.

வன்முறை அல்லது தற்கொலை ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுடன் பணியாளர்கள் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here