பேச்சுவார்த்தைகளுக்கு பலன் கிடைத்ததா?

இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. படைகளை குறைத்து பதற்றத்தை தணிக்கவும், எல்லையில் முன்பு இருந்த நிலைமையை பராமரிப்பது தொடர்பாகவும் ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் படைப்பிரிவு கமாண்டர்கள் அளவில் இதுவரை 8 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 8-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் சுசுல் முகாம் அருகே நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து மத்திய அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியா-சீனா படைப்பிரிவு கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நவம்பர் 6ம் தேதி சுசுல் பகுதியில் நடைபெற்றது. இந்தியா-சீனா எல்லையின் மேற்கு பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியில் இரு தரப்பினரும் படைகளை விலக்குவது குறித்து நேர்மையான, ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மேலும், இந்தியாவும் சீனாவும் ராணுவ மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் பேச்சுவார்த்தை மற்றும் தகவல்தொடர்புகளை பராமரிக்க ஒப்புக் கொண்டன. மேலும், ஆலோசனைகளை தொடர்ந்து முன்னெடுப்பது, நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுப்பது, எல்லைப்பகுதியில் அமைதியை கூட்டாக பராமரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. விரைவில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை நடத்தவும் இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here