‘பொறுப்பான பெண்மணி என் அம்மா’ -கமலா ஹாரிஸ்

உலகின் செல்வாக்குமிக்க அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி, முடிவை அறிவிப்பதில் இருந்த இழுபறி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அதிபர் தேர்தலில் 77 வயது ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 56 வயது கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையொட்டி கமலா ஹாரிஸ், டெலவாரே மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் வெற்றி உரை ஆற்றினார். அப்போது அவர் தமிழ்நாட்டின் மன்னார்குடி பகுதியை சேர்ந்த தனது தாயார் சியாமளா கோபாலனை உருக்கமுடன் நினைவுகூர்ந்தார்.

அவர் கூறியதாவது:-

அமெரிக்க மக்களே, நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டிருக்கலாம். கவலை இல்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு எவ்வாறு விசுவாசமான, நேர்மையான, தயார்நிலையிலான துணை ஜனாதிபதியாக ஒவ்வொரு நாளும் உங்களைப்பற்றியும், உங்கள் குடும்பங்களைப் பற்றியும் சிந்தித்தவாறே கண்விழித்த ஜோ பைடனைப்போன்று நானும் இருக்க முயற்சிப்பேன். இப்போது முதல் எனது பணி தொடங்குகிறது. நீங்கள் அமெரிக்காவுக்கு ஒரு புதிய நாளை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள்.

இந்த நம்ப முடியாத பயணத்தில் எங்கள் குடும்பத்தை அவர்களிடம் வரவேற்ற ஜோ பைடனுக்கும், ஜில் பைடனுக்கும் நாங்கள் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு மிகவும் பொறுப்பாக செயல்பட்ட பெண்மணி எனது அம்மா சியாமளா கோபாலன். என் அம்மா எப்போதும் எங்கள் இதயத்தில் வீற்றிருக்கிறார். அவர் 19 வயதில் இந்தியாவில் இருந்து இங்கு வந்தபோது இந்த தருணத்தை நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஆனால் இது போன்ற ஒரு தருணம், அமெரிக்காவில் சாத்தியமான ஒன்று என்று அவர் மிகவும் நம்பினார். எனவே நான் அவரையும், பெண்களின் தலைமுறைகளையும் அதுவும் கருப்பினப் பெண்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.

கருப்பின பெண்கள் உள்பட அனைவருக்குமான சமத்துவத்துக்காகவும், விடுதலைக்காகவும், நீதிக்காகவும் இவ்வளவு போராடி பெரும் தியாகங்கள் செய்தவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் நமது ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.

100 ஆண்டுகளுக்கு முன்னர், 19-வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலமும், 55 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்குரிமை சட்டத்தின் மூலமும், இப்போது இந்த 2020-ம் ஆண்டு, நமது நாட்டின் புதிய தலைமுறை பெண்கள் வாக்கு அளித்து, தங்கள் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்கிறார்கள். தங்கள் குரலை கேட்க வைத்திருக்கிறார்கள்.

நமது நாட்டின் முக்கியமான தடைகளில் ஒன்றை உடைத்து ஒரு பெண்ணை நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கான துணிச்சல், ஜோ பைடனுக்கு இருந்தது என்பது ஜோ பைடனின் அற்புதமான தன்மைக்கு அருமையான சான்று.

இந்த இரவில் இதைக் கவனிக்கிற ஒவ்வொரு சிறுமியும் இந்த நாடு, சாத்தியங்களுக்கான நாடு என்பதை பார்க்கிறார்கள். இந்த நாட்டின் குழந்தைகளுக்கு, அது அவர்கள் ஆணா, பெண்ணா என பாலின பேதம் பார்க்காமல் இந்த தேசம் ஒரு தெளிவான செய்தியை அனுப்பி இருக்கிறது.

அந்த செய்தி- நீங்கள் லட்சியத்துடன் கனவு காணுங்கள். உறுதியுடன் நடை போடுங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்காத வகையில் உங்களை நீங்கள் பாருங்கள். ஏனென்றால் அவர்கள் இதை ஒருபோதும் பார்த்ததில்லை. நீங்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களை பாராட்டுவோம்.

உண்மையான பணி இப்போது தொடங்குகிறது. கடின உழைப்பு தேவைப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தோற்கடிக்கவும், உயிர்களை காப்பாற்றவும் அத்தியாவசியமான பணியை செய்ய வேண்டியதிருக்கிறது. நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, உழைக்கும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டியதிருக்கிறது.

நமது சமூகத்திலும், நீதி அமைப்பிலும் புரையோடிப்போய் இருக்கிற இனவெறியை வேரறுக்க வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் தேவை இருக்கிறது. நமது நாட்டை ஒற்றுமைப்படுத்தவும், நம் தேசத்தை குணப்படுத்தவும் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது.

நாம் கடந்து செல்லவேண்டிய பாதை எளிதானது அல்ல. ஆனால் அமெரிக்கா அதை சந்திக்க தயாராக இருக்கிறது. அதே போன்று ஜோ பைடனும், நானும் தயாராக இருக்கிறோம்.

நம்மிடம் உள்ள சிறந்தவற்றை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அதிபரை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர் உலகம் மதிக்கும் தலைவர். அதை குழந்தைகள் கவனிக்க முடியும். அவர், நமது படைகளை மதிக்கும் தலைமை தளபதி. அவர், நமது நாட்டையும் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர் அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக விளங்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here