50 ஆண்டுகளாக தமிழ் கற்றுக்கொடுத்த ரஷ்யநாட்டு அறிஞர் மரணம்

உலகின் மூத்த மொழி தமிழ் என்பதை நாம் சொல்வதை விடவும், வெளிநாட்டைச் சேர்ந்த வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் சொல்லும்போதே அதில் ஒரு நம்பகத் தன்மை ஏற்படும். அப்படி சொன்னவர்களில் மிக முக்கியமானவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் அலெக்ஸாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி.

ரஷ்யாவின் பத்து பல்கலைக்கழகங்களில் தமிழை மாணவர்களுக்குப் பிழையற கற்பித்தவர் அலெக்ஸாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி.

தமிழில் வாசிப்பு பழக்கத்தை விரிவுப்படுத்தியதில் ரஷ்யாவின் ராதுகா பதிப்பகத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. குறிப்பாக, இன்றைக்கு எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே சின்ன வயதில் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட சிறுவர் நூல்களைப் படித்து வந்தவர்களாகவே இருப்பார்கள். அதில் அலெக்ஸாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி பங்கு அளப்பரியது.

ரஷ்யாவில் தமிழை மாணவர்களுக்குப் பரப்புவது மட்டுமல்லாமல், தமிழ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் அலெக்ஸாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி பெரிதும் முயற்சிகள் எடுத்தார். 2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு, தொல்காப்பியம் – சங்க இலக்கியம் குறித்து விரிவான ஆய்வுக்கட்டுரையை வாசித்தார். அது பலரின் கவனத்தை ஈர்த்தது. விவாதிக்கும் விஷயங்கள் அதில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

தமிழுக்கு பெரும் தொண்டறாற்றிய அலெக்ஸாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி நேற்று மரணமடைந்தார். ரஷ்யாவுக்கும் தமிழுக்கும் பெரும் பாலமாக இருந்த அலெக்ஸாண்டர் மிகைலோவிச் துப்யான்ஸ்கி இழப்பு நிஜமாகவே பேரிழப்புதான். அவரின் இழப்புக்கு தலைவர்கள் எழுத்தாளர்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here