பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சாலையில் ராணுவ ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை

ஜெய்சல்மர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள பாரத் மாலா நெடுஞ்சாலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் திடீரென தரையிறக்கப்பட்டன.

தீவிர பயிற்சி

அவசர காலங்களில் சாலைகளை விமான ஓடுதளமாக பயன்படுத்துவதற்காக, ஹெலிகாப்டர்களை தரையிறக்குதல் மற்றும் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு செல்லுதல் போன்ற தீவிர பயிற்சிகளை ராணுவம் மேற்கொண்டது.

அப்பாச்சி, ருத்ரா ஹெலிகாப்டர்கள்

மக்களையே வியப்பில் ஆழ்த்திய இந்த ஒத்திகையில், இந்திய ராணுவத்தின் அதிநவீன அப்பாச்சி மற்றும் ருத்ரா ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. வழக்கமான விமான தளங்கள் அல்லது ஹெலிபேடுகள் கிடைக்காத அசாதாரண சூழலில், மாற்று தளங்களை பயன்படுத்தி ஹெலிகாப்டர்களை இயக்கும் திறனை மேம்படுத்துவதற்காகவே இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ரகசியம் காக்கும் ராணுவம்

எல்லைக்கு மிக அருகில் இந்த ஒத்திகை நடத்தப்பட்ட போதிலும், இந்த பயிற்சியின் குறிப்பிட்ட நோக்கம் என்ன என்பது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here