கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 2020 ஆம் ஆண்டு உலகின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரு நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
தற்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் அடுத்த ஆண்டு பொருளாதாரம் சற்று மேம்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் பட்சத்தில் பெருநிறுவனங்கள் தங்கள் வீழ்ச்சியில் இருந்து மீள அதிக வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு மீண்டு வர உள்ள பெரு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் 2021 ஆம் ஆண்டு செய்ய வேண்டிய அமைப்பு ரீதியிலான சில முக்கிய பணிகளை காண்போம்.
குறிப்பாக, தொழில்துறை பெருநிறுவனங்களில் டிஜிட்டல் யுகத்திற்கு மாற சாதாரணமாக 5 ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பெருநிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை டிஜிட்டல் யுகத்திற்கு 6 மாதங்களில் மாறியுள்ளன.
2021- இல் பெருநிறுவன தலைமை செயல் அதிகாரிகள் செய்ய வேண்டிய சில முக்கிய பணிகளாக,
* தகவல்களும், தொழில்நுட்பமுமே தொழில்துறையின் மிகமுக்கிய இடம்பெற்றவை. வெற்றிபெறும் பெருநிறுவனங்கள் தொழில்நுட்பம், மனித உழைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டு செல்வதையே முதன்மையாக கொண்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தொழில்துறையின் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைப்பது அடுத்துவரும் ஆண்டுகளின் மிக முக்கிய பணியாக உள்ளது.
* பெருநிறுவனங்களின் இயக்கம் அதன் முதலீட்டை சார்ந்ததாகவே உள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் முறைகளை உருவாக்க அதிக முதலீடுகள் தேவைப்படும் சூழல் நிலவி வருகிறது.
இதனால், நிறுவனங்களில் முதலீடுகள் வருவதற்கான வழிகளை எளிமைபடுத்துவதன் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சியை கொண்டுசெல்ல ஏதுவான சூழல் ஏற்படும்.
* உலக அளவில் செயல்பட்டு வரும் பெருநிறுவனங்கள் ஒரு நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் உள்ளூர் மக்களிடமும் தங்கள் பொருட்களைக் கொண்டு செல்லும் நிலையை எட்ட வேண்டும்.
அம்மக்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே தொடர்பை உருவாக்கும் வகையில் உள்ளூர் சந்தையாளராக மாறும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கொரோனா காலம் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக பெரு நிறுவனங்கள் சிறு நகர்புற பகுதிகளுக்கும் எளிதில் சென்றடையும் வசதியை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.