டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது

வாஷிங்டன்-

டிரம்ப், இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற உள்ள நிலையில் அமெரிக்க அரசு துறைகள் தொடர்ந்து இயங்குவதற்கு தேவையான சில முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றம் நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில், 2021- ஆம் ஆண்டுக்கான, 740 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.54 லட்சம் கோடி) மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் “தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் 2021” என்கிற பாதுகாப்பு கொள்கை மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து அந்த மசோதா அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளதாக கூறி,டிரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார்.

இந்த மசோதாவின் 230- ஆம் பிரிவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்றும் ராணுவ மையங்களின் பெயர்களை மாற்றுவது, அவசரகால முடிவெடுக்க அதிபருக்கு அதிகாரம் இல்லாதது என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் மசோதாவில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த மசோதாவிலிருந்து கிடைக்கும் நிதி மூலமே பாதுகாப்புப் படையினருக்கு ஊதியம் அளிப்பது முதல் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது வரை அனைத்தும் மேற்கொள்ள முடியும். எனவே இந்த மசோதாவுக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

அமெரிக்க அரசியலமைப்பைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3- இல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் அதிபரின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்க முடியும்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

அங்கு 322 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 87 பேர் எதிராகவும் வாக்களித்தனர். டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, 109 எம்.பி.க்கள், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் மூலம் அந்த தீர்மானம் பெருவாரியான வித்தியாசத்தில் நிறைவேறியது. இது, ஜனாதிபதி டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதேசமயம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறாது என டிரம்ப் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை நிராகரிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 81 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன் மூலம் செனட் சபையிலும் இந்த மசோதா எளிமையாக நிறைவேறியது. டிரம்பின் 4 ஆண்டு பதவி காலத்தில் அவரது வீட்டோ அதிகாரம் நிராகரிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதுவும் டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் சில தினங்களுக்கு முன்பாக இது நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here