கள்ளச்சந்தையில் கொரோனா தடுப்பூசிகள். வாங்கும் நாடுகளை எச்சரிக்கும் ஐநா!

உலகளவில் கொரோனாவால் 20 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கும் வேளையில், அதற்கெதிரான தடுப்பூசியை தேவைக்கு அதிகமாக வாங்கும் நாடுகளை ஐநா சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குடெரெஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய அவர், “கொரோனா வைரசானது உலகளவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரைக் குடித்திருக்கிறது. இது உலக நாடுகளுக்கிடையேயான ஒற்றுமின்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

கொடிய நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், செல்வந்த நாடுகளுக்கே அதிகளவில் தடுப்பூசிகள் சென்று சேருகின்றன. ஏழ்மையான நாடுகளுக்கு ஒரு தடுப்பூசி கூட சென்ற பாடில்லை. கொரோனாவுக்கு எதிராக அறிவியல் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், அதற்கு நேரெதிராக நமது ஒற்றுமை தோல்வியடைந்திருக்கிறது.

நாட்டு மக்களைக் காப்பதற்கு அரசுக்கு முழு பொறுப்பும் இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. ஆனால், காசு இருக்கிறது என்பதற்காக தேவைக்கு அதிகமான தடுப்பூசிகளைச் சில நாடுகள் வாங்கி குவிக்கின்றன.

இதன்மூலம், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேசமயம் அதிலிருந்து உலகம் மீளவும் நீண்ட காலமாகும். ஒரே ஒரு நாட்டால் மட்டும் கொரோனாவை வீழ்த்த முடியாது. அனைவரும் ஒன்றுகூட வேண்டும்” என்றார்.

அடுத்த வாரம் அந்தோனியோ குடெரெஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here