கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை -சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை

தஞ்சாவூர் பெரிய கோயில் வளா கத்தில் உள்ள கண்காணிப்பு கேம ராக்கள் செயல்படாத நிலையில், கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களிடம் திருடர்கள் தொடர்ந்து கைவரிசையைக் காட்டி வருவதால் பலரும் அச்ச மடைந்துள்ளனர்.

மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள தஞ்சாவூர் பெரிய கோயிலை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இக்கோயிலுக்கு, நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர்.

இதனால், கோயிலின் பாதுகாப்பு கருதி கடந்த 2014- ஆம் ஆண்டு ரூ.1.30 கோடி மதிப்பில், 31 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. செயல்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே அவை செயலிழந்துவிட்டன. பின்னர், சில இடங்களில் கேமராக்கள் பழுது நீக்கப்பட்டபோதும், அவை மீண்டும் செயலிழந்துவிட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு கோயில் குடமுழுக்கு நடைபெற்றபோது, கோயில் முழுவதும் மேலும் புதிதாக 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிரந்தரமாக பொருத் தப்பட்டன. ஆனால், அவற்றுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையே, கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மாயமாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதில் ஒரு சிலர் போலீஸில் புகார் அளித்தாலும், வெளியூர்வாசிகள் பலர் தேவையற்ற அலைச்சல் என்பதால் புகார் அளிக்காமல் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஜெரால்டு கிறிஸ்டோபர், தன் குடும்பத்துடன் பெரிய கோயிலுக்கு வேனில் வந்திருந்தார். அவர்கள் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வராஹியம்மன் சன்னதி பின்புறம் அமர்ந்து, கோயிலை புகைப்படம் எடுத்துள்ளனர். சிறிது நேரத்துக்குப் பிறகு, அவர்கள் வேனில் ஏறச் சென்றபோது, அவர்களிடம் இருந்த ஒரு பை காணாமல் போனது தெரியவந்தது. அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அந்தப் பையை ஒரு பெண் எடுத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, காணாமல் போன பையில் 12 பவுன் நகை இருந்ததாக, தஞ்சை மேற்கு போலீஸாரிடம் ஜெரால்டு கிறிஸ்டோபர் புகார் அளித்தார். உடனடியாக போலீஸார் வந்து, கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அவை செயல்படாதது தெரியவந்தது. இதனால், வேறு வழியின்றி பாதிக்கப்பட்டவரிடம் போலீஸார் புகாரை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்துவிட்டனர்.

கும்பாபிஷேகத்தின்போது பொருத்தப்பட்ட கேமராக்களுக்கு இணைப்பு கொடுக்காததுடன், பழைய கேமராக்களும் பழுதாகி விட்ட நிலையில், தற்போது நான் கைந்து கேமராக்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால், பெரிய கோயிலில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தொல்லியல் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘கோயிலுக்குள் பொருத்தப் பட்டுள்ள கேமராக்களுக்கு உயர் தரத்தில் இணைப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது. அதற்கு போதுமான நிதி தற்போது இல்லாததால், இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. நிதி கிடைத்ததும், கேமராக்களுக்கு இணைப்பு கொடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here