மக்களவைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 12 தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேலாக பெற்றுள்ளது. சுமார் 8 சதவீத வாக்குகளை அக்கட்சி நெருங்கியுள்ளதால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. பாஜக கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, ஓபிஎஸ், ஐஜேகே போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.


அதேபோல 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ம் இடத்தை பிடித்துள்ளது. ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் நாதக 3ம் இடத்தில் உள்ளது. அதேபோல இடைத்தேர்தல் நடைபெற்ற விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் நாதக 3ம் இடம் பிடித்தது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள் தேவைப்படும் நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் அந்த எண்ணிக்கையை பெற்றுவிட்டதாக அக்கட்சியினர் கூறிவருகின்றனர். முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நாம் தமிழர் கட்சியின் இறுதியான வாக்கு சதவீதம் தெரியவரும்.




















