தூரம் தூரமில்லை-தமிழுக்குப் பாரமில்லை!

முன்பு, தோட்டங்கள் இருந்த இடங்களில் புதிய வீடமைப்புகள் உருவாகிவிட்டன.  வசதியுள்ளவர்கள் அப்பகுதிகளில் வீடுகள் வாங்கிக்கொண்டார்கள், வசதியற்றவர்கள் வேற்றிடம் நாடிச்சென்று வாழத்தொடங்கினர். 

தோட்டத்தில் இருந்த சில ஆலயங்கள் கூட இடம்மாறிவிட்டன, ஆனால், அதிமான தமிழ்ப்பள்ளிகள் மட்டும் அசையாமல் போனதற்கு அங்குவாழ்ந்த  தமிழ் மக்களே காரணமாக இருதிருக்கின்றனர். 

ஆலயங்களை தங்களோடு கொண்டுசென்ற மக்கள் தமிழ்ப்பள்ளிகளை மட்டும் அனாதையாக விட்டுச்சென்றார்கள். இது மக்களின் தவறு என்றும் பழி சொல்ல முடியாது.  அறியாமையால் அப்படி நடந்தது.

பள்ளிகளை இடம் மாற்றுவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன என்பது ஒருபுறம். அதிக மக்கள் வாழும் பகுதிக்கு, குறிப்பாக தமிழ் மக்கள் வாழும் பகுதிக்குப் பள்ளிகளை மாற்ற முயற்சி செய்யாமை ஒருபுறம்.

இதனால் பள்ளிகள் கைவிடப்பட்டதில் மாணவர்கள் எண்ணிக்கை முற்றாகக் குறைந்தது என்பதும் உண்மை.

பள்ளியை  இடம் மாற்றம் செய்ய முனையாததன் விளைவு, ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் கடுகாகச் சிறுத்தன.

பல பள்ளிகள் தோட்டப்புறத்தில் இருந்ததால் தமிழ்த்தொழிலாளர்களாக இருந்தவர்கள் வெளியேறினர். அங்கிருந்த ஒருசிலர் மட்டும் தம்பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்த்தனர். அங்கு படித்தவர்கள் இடைநிலைப்பள்ளிக்குப் போனதும் மாணவர்கள் இல்லாத நிலை  உருவாகிப்போனது.

இன்னும்கூட மாணவர்கள் அற்ற தமிழ்ப்பள்ளிகளை இடம்மாற்றும் முயற்சிகள் நடப்பதாகவே இல்லை. அந்தப் பேச்செல்லாம் சீசன் வார்த்தைகளாகிவிட்டன. அதற்கான முயற்சிகள் செய்யப்படாமல் இருக்கின்றன. அப்படிச்செய்தாலும் மாணவர்களைத் தேடுவது என்பது சிக்கலாகவே இருக்கிறது.

பெற்றோர் மனம் வைத்தால் மட்டுமே இவற்றுக்குத் தீர்வுகண்டுவிடமுடியும். 5 கிலோ மீட்டர் தொலைவாக இருந்தாலும் பிள்ளைகளை இங்குதான் சேர்ப்பேன் என்ற பிடிவாதம் மட்டும் நோயாகத்தொற்றிக்கொண்டால் தூரம்  ஒரு தூரமில்லை.

இப்போதெல்லாம் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழுவினர் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவதைக் காணமுடிகிறது. மாணவர்களுக்கு பேருந்து கட்டணம், சீருடைகள், காலணிகள், இலவச உணவு. பள்ளிக்கட்டணம் என தருவதும் தருவதற்குத் தயாராகவும் இருக்கிறார்கள். 

அப்படியிருந்தும் பல தமிழ்ப்பெற்றோர்கள் ஆரம்பக்கல்வியைத் தாய்மொழியில் கற்கவிடாமல் வேற்றுமொழிப்பள்ளிகளில் சேர்ப்பது என்பது யாருடைய தவறு?

வேற்றுமொழி முதன்மையானதல்ல, முதலில் தாய்மொழி , பின்னர் வேற்றுமொழியாக வரவேண்டும். இப்படித்தான் வரிசையிடப்பட்டிருக்கிறது.

வேற்றுமொழிப்பள்ளிகளில் சேர்ந்திருக்கும் பிள்ளைகளால் தாய்மொழியின் தனித்துவத்தை அறியவே முடியாது. இது பிள்ளைகளின் தவறல்ல. முழுக்க முழுக்க பெற்றோர்கள் தமிழுக்குச் செய்யும் துரோகம். மிகப்பெரிய குற்றம்.

பல பெற்றோர்கள் வேற்றுமொழியில் தாய்மொழிக்கற்பதைக் கெளரவம் எனக் கருதியே செய்கிறார்கள். தாய்மொழியாக தமிழ் இருக்கத் தகுதியில்லை என்று கருதினால் அப்பெற்றோர்கள் தமிழர்களாக இருப்பதில் அர்த்தமே இல்லை.

எந்தமொழியானாலும் கற்கை நன்றே! ஆனால்,  தாய்மொழிக்குத் துரொகம் இழைத்தால் தமிழன் என்று எப்படித்தான் வாழ்வது? எப்படித்தான் அழைப்பது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here