நாட்டில் உள்ள 1.64 மில்லியனுக்கும் அதிகமான கிக் (Gig) தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், கிக் தொழிலாளர் சட்டம் 2025 (சட்டம் 872) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார். இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த புதிய சட்டத்தின் மூலம் கிக் தொழிலாளர்களுக்கு தெளிவான சேவை ஒப்பந்தங்கள், ஒப்புக்கொள்ளப்பட்ட வருமான விகிதம், பாகுபாடுகளுக்கு எதிரான சட்டப் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், சமூகப் பாதுகாப்பு வாரியம் (PERKESO) மூலம் கிக் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் வழங்கப்படுவதோடு, தொழில்முறைப் பிரச்சனைகளைத் தீர்க்க மலேசிய தொழில் உறவுகள் துறை, கிக் தொழிலாளர் தீர்ப்பாயம் ஆகியன முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், கிக் தொழிலாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப தொடர்ந்து பணியாற்ற முடியும் என்றும், இது தற்போதைய கிக் பொருளாதாரச் சூழலைப் பாதிக்காது என்றும் அமைச்சர் ரமணன் உறுதி அளித்தார்.
சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற அண்டை நாடுகள் இத்தகைய பாதுகாப்பை ஒரு சில துறைகளுக்கு மட்டுமே கட்டம் கட்டமாக வழங்கி வரும் நிலையில், மலேசியா அனைத்து கிக் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய விரிவான சட்டக் கட்டமைப்பை உருவாக்கி முன்னுதாரணமாகத் திகழ்வதாக அவர் பெருமிதத்துடன் கூறினார். இந்தச் சட்டத்தின் கீழ் இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மட்டுமின்றி, கலை, இசை, இதழியல், பராமரிப்புத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மலேசியப் பிரஜைகளும் கிக் தொழிலாளர்களாகக் கருதப்படுவர்.
மேலும், கிக் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு துறைசார் வல்லுநர்களைக் கொண்ட 26 உறுப்பினர்கள் அடங்கிய கிக் ஆலோசனைக் குழு (MPGig) வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று அமைச்சர் அறிவித்தார். இக்குழுவின் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதில் கிக் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான முறையான வருமான விகிதம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரா. தங்கமணி
ராமேஸ்வரி ராஜா



















