டான்செரி டோமி தோமஸ் முன்னாள் அட்டர்னி ஜெனரல். இவர்தம் பெயரைக் கேட்டாலே ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் அலறுகின்றனர். வெறுப்பைக் கொட்டுகின்றனர். தீண்டத்தகாதவராகப் பார்க்கின்றனர்.
“டோமி தோமஸை நான்தான் அட்டர்னி ஜெனரலாகக் கொண்டுவந்தேன் , சிபாரிசு செய்தேன், நியமனம் செய்தேன் ” என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உடபட, பலர் கூவிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், உண்மை நிலையில் 13ஆவது பொதுத்தேர்தல் பரப்புரையின்போது அப்போதைய ஜசெக தலைவர் கர்ப்பால் சிங் ” நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், டோமி தோமஸ்தான் அட்டர்னி ஜெனரல் என்று அறிவித்தார்.
சட்டத்துறையில், அரசியலமைப்புச் சட்ட விவகாரங்களில், டோமிக்கு உள்ள நிறந்த அனுபவம் , ஞானம், மனப்போக்கு போன்றவையால் கவரப்பட்ட கர்ப்பால் இப்பரிந்துரையை முன் வைத்தார்.
முன்னாள் லார்டு பிரசிடென்ட் – பெடரல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி துன் சாலே அபாஸ் கூட டோமி தோமஸ் பெயரை அட்டர்னி ஜெனரல் பதவிக்கு சிபாரிசு செய்ததோடு, அப்பாதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற ஒரு வலுவான வாதத்தை முன்வைத்தார்.
துன் மகாதீர் பிரதமராக (முதல் தடவை) இருந்தபோது துன் சாலே அபாஸ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டது சட்டத்திற்குப் புறம்பானது என்று துன் சாலே வழக்குத் தொடுத்தார். வெற்றியும் பெற்றார். அவரின் சார்பில் வாதாடியது யார் தெரியுமா? சாட்சாத் டோமி தோமஸ்தான்.
பெடரல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டத்தோசெரி கோபால் செரிராம் டோமி தோமஸின் பெயரை அட்டர்னி ஜெனரல் பதவிக்கு முன்மொழிந்தவர்களில் ஒருவர் என்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டியுள்ளது.
இப்பட்டி ஒருபுறமிருக்க டோமி தோமஸுக்கு எதிர்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் போலீஸ் புகார்கள் செய்தவர்களையும் செய்துகொண்டிருப்பவர்களையும் பாருங்கள். இதன் பின்னணியில் உள்ள உண்மை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக்காட்டும்.
மாலாய்க்காரர் அல்லாதார் எவ்வளவுதான் கெட்டிக்காரராக இருந்தாலும் , திறமைசாலியாக இருந்தாலும் இனம் என்று வரும்போது அரைகுறைகளுக்குக் கீழ்தான் இருக்க வேண்டும் என்பது ஆணவம் நிறைந்தவர்களின் எழுதாத சட்டமாகவே இருக்கிறது.
இனவாதம்தான் இந்நாட்டை ஆட்சிசெய்கிறது. தேசிய ஒற்றுமை, இன நல்லிணக்கம் என்பதெல்லாம் அழுக்குச் சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது போன்றதுதான்.
இங்கு உயர் பதவிகள் என்கின்றபோது இனக்கண்ணாடி கொண்டுதான் அனைத்தும் பார்க்கப்படுகின்றன. முடிவும் செய்யப்படுகின்றன.
டோமி தோமஸ் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்? உண்மையை உண்மையாகச் சொன்னார் அவவளவுதானே! இதற்காக போலீஸ் நிலையங்களில் 7க்கும் அதிகமான் புகார்கள்.
இரு விசாரணைக்கோப்புகள் திறக்கப்பட்டிருக்கின்றன. விசாரணைக்கும் அழைக்கப்படவுள்ளார்.
சொன்னாலும் வெட்கமடா … சொல்லாவிட்டாலும் துக்கமாடா …! அதுதான் டோமி தோமஸ் விவகாரத்திலும் உண்மையாகிக்கொண்டிருக்கிறது.
இனவாதம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாலும் அதுபற்றிப் பேசுவதற்கும் குரல்கொடுப்பதற்கும் கூட யாருக்கும் துணிவில்லை.
புகார் செய்தவர்களும் டோமியின் டான்செரி பட்டம் பறிக்கப்படவேண்டும் என்று துடிப்பவர்களும் அவரின் சட்ட அறிவாற்றலுக்கு முன் நிற்க முடியுமா?