ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இணையமும் இல்லை.

போலிச் செய்திகள் வாட்சாப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள், சமூக ஊடகங்கள் வழியாகவும் மட்டுந்தான் பரவுமா என்ன? மக்கள் பலரும் தங்களின் அச்சத்துடன் போலிச் செய்திகளையும் பகிர தொடங்கியதால், நாட்டில் என்ன நடக்கிறது? 2015ஆம் ஆண்டு முதல் மீண்டு வந்த நமது வாழ்க்கை ஒரே இரவில் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதா? என்று மியான்மர் மக்கள் பரிதவிக்க தொடங்கினர்.

அதே நாள் மதியம் 12 மணி முதல், தொலைத்தொடர்பு சேவை படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்தது. மியான்மர் மக்கள் எது நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. ஆம், 1962ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கைக்கே அல்லல் பட்ட மக்கள், 2015ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று அடைக்கப்பட்டது என்று தெரியவந்ததாக பதறுகிறார் மியான்மரின் யாங்கோன் (ரங்கூன் என்றும் அழைக்கப்படுகிறது) நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ்.

மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. குறிப்பாக, யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அங்கு நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தமிழர்களின் பார்வையில் அறிவதற்காக மியான்மரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சில தமிழர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.

ஆங் சாங் சூச்சியும் ரோஹிங்யா முஸ்லிம்களும்

ஆங் சாங் சூச்சியால் மட்டுமே மியான்மரில் மக்களாட்சியை சிறப்பாக நடத்திட முடியும் என்பது போன்ற கருத்தை அங்கு வாழும் தமிழர்கள் முன்வைத்தாலும், ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் அதே ஆங் சாங் சூச்சி மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை புரிந்துகொள்ள வேறுபட்ட கண்ணோட்டம் தேவைப்படுவதாகக் கூறுகிறார் அங்கு வாழும் வழக்கறிஞரான அகத்தியன். “மியான்மரில் 2015ஆம் ஆண்டு மக்களாட்சி அரசாங்கம் ஆட்சியை அமைத்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டு பெரும்பாலான இடங்களில் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.

குறிப்பாக, உள்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் அனைத்தும் ராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந்தன. எனவே, அந்த துறை சார்ந்த நடவடிக்கைகளில் சூச்சி தலைமையிலான அரசால் தலையிடவோ அல்லது தாக்கம் செலுத்தவோ இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ரக்கைன் மாநிலத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும், இங்குள்ள சூச்சி தலைமையிலான அரசு செய்ததை போன்று சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு தெரிந்தன” என்று கூறுகிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் உள்ளூர் ஊடகங்கள் ஒருவிதமான செய்தியையும், சர்வதேச ஊடகங்கள் வேறுவிதமான செய்தியையும் வெளியிட்டதாக கூறும் அகத்தியன், ஊடகங்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே இந்த விவகாரத்தில் வெளியுலகத்துக்கு தவறான புரிதல் ஏற்பட்டதற்கு காரணம் என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, தன்னைப் பொறுத்தவரை, ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்பு குற்றச்சாட்டில், ஆங் சாங் சூச்சிக்கோ அல்லது அவரது அரசுக்கோ தொடர்பில்லை என்றும், அவர் இனஅழிப்பை ஆதரிக்கவில்லை என்றும் நம்புவதாக கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டங்களில் தானும் ஈடுபட்டு வருவதாக அகத்தியன் கூறுகிறார்.

என்னதான் தீர்வு?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது உலகமே அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது. அதே காலகட்டத்தில், அதாவது நவம்பர் 8ஆம் தேதிதான் மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்று, அதில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, ஆங் சாங் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி ஆட்சியை தக்க வைத்தது.

ஆனால். எப்படி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, அதில் முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரோ, அதேபோன்று மியான்மரில் சூச்சியின் கட்சி மீது ராணுவம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரம் ஏதுமின்றி முன்வைத்தது.

ராணுவத்தின் பிடியில் மியான்மர்: பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள்

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுந்தர்ராஜ், “முன்னெப்போதுமில்லாத வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு, சிறப்பான முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது. பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். ஆனால், ராணுவமோ கொரோனா வைரஸை காரணம் காட்டி, தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணத்துடனே தொடக்கத்தில் இருந்தே செயல்பட்டது. ஒரு கட்டத்தில், தேர்தல் தேதி உறுதியானவுடன், பெருந்தொற்று பிரச்சனையை கருத்திற்கொண்டு, பொது கூட்டங்களுக்கு மாறாக வானொலி, காணொளி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டே சூச்சி மக்களின் ஆதரவை பெற்றுவிட்டார். இந்த தோல்வியை ஏற்க விரும்பாத ராணுவம், கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது” என்று கூறுகிறார்.

மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்கவிட்டால், கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பல்வேறு உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் மியான்மர் ராணுவத்துக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.

மியான்மரில் ஃபேஸ்புக்கை முடக்கியது ராணுவம் – என்ன நடக்கிறது அங்கே?

“பாகிஸ்தானில் வாழ்ந்தாலும் நாங்களும் தமிழர்களே” – பெருமிதப்படும் அறியப்படாத சமூகம்

இந்த விவகாரத்தில் தீர்வு எப்படி எட்டப்படக்கூடும் என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்ராஜ், “மக்கள் அமைதியான முறைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், ராணுவத்தின் ஆட்சியை அகற்றுவதற்கு இதெல்லாம் போதாது. மியான்மரின் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் தலையிட்டே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். மற்றபடி, தமிழர்கள், பௌத்த மதத்தினர், முஸ்லிகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் தொடர்ந்து ஒருமித்த குரலில் போராடுவோம்” என்று கூறுகிறார்.

“உலகம் முழுவதும் மியான்மரில் தயார் செய்யப்படும் மரப்பொருட்கள் மற்றும் உணவு தானியங்களுக்கு சிறந்த பெயர் உள்ளது. இதைத்தவிர்த்து தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களும் இந்த நாட்டில் உள்ளன. ஆனால், இத்தனை இருந்தும் எங்களது வாழ்க்கை வாழ்வா – சாவா என்ற நிலையிலேயே தினமும் நகர்கிறது.”

சுதந்திரமும், ராணுவ ஆட்சியின் பிடியும்

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. தாய்லாந்து, லாவோஸ், வங்கதேசம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இங்கு வாழும் சுமார் 5.4 கோடி மக்களில் பெரும்பாலானோர் பர்மிய மொழி பேசுபவர்களாக உள்ளனர். நாட்டின் மிகப் பெரிய நகரமாக யங்கோன் இருந்தாலும், நேபியேட்டோ தலைநகரமாக விளங்குகிறது.

1948ஆம் ஆண்டு மியான்மர் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. எனினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வெகுகாலம் நீடிக்கவில்லை. 1962 முதல் 2011 வரை ராணுவத்தின் ஆட்சியில் மியான்மர் இருந்தது. 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றிபெற்று ஆங் சாங் சூச்சி ஆட்சியமைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here