மியான்மரில் தொடரும் போராட்டம் ஆளும் கட்சி அலுவலகத்தில் ‘ரெய்டு’

யாங்கூன் :
அண்டை நாடான மியான்மரில் போலீசாரின் அடக்குமுறையை மீறி போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஆங் சன் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராணுவம் புகுந்து நேற்று முன் தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
அண்டை நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் ஆங் சன் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது.
இத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து ஆளும் கட்சி வெற்றிபெற்றதாக ராணுவம் குற்றம்சாட்டியது. இதையடுத்து கடந்த 1  ஆம் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. கட்சி தலைவர் ஆங் சன் சூச்சி மற்றும் அதிபர் வின் மைன்ட் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.இந்நிலையில் ராணுவ ஆட்சியை திரும்ப பெறவும் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுக்கவும் கோரி கடந்த 6 ஆம் தேதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் நைப்பிடாவ் முக்கிய நகரங்களான யாங்கூன் மண்டலேவில் போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே ஆளும் கட்சியான ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராணுவ அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த ஆவணங்கள் கணினி ‘ஹார்டு டிஸ்குகள்’ உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். ராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மியான்மர் அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்தது.

மியான்மரின் நெருக்கடி நிலை, மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் நாளை விவாதிக்க உள்ளது.  கிளர்ச்சியாளர் குழு மிசோரத்தில்  இந்தியா – மியான்மர் இடையிலான 404 கி.மீ. சர்வதேச எல்லைப் பகுதி நம் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் அமைந்துள்ளது.

மியான்மரில் ராணுவ புரட்சி வெடித்துள்ளதை அடுத்து அந்நாட்டை சேர்ந்த சின் தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சியாளர்கள் குழு மிரோசத்தில் தஞ்சம் கோரியுள்ளது.  அந்த குழுவைச் சேர்ந்த 40 குடும்பத்தினருக்கு மிசோரத்தின் சம்பாய் மாவட்டத்தில் தஞ்சம் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here