வைரமுத்துவின் நாட்படு தேறல்

100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள்-

சென்னை-

100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்து உருவாக்கி வரும் ‘நாட்படு தேறல்’ பாடல் தொகுப்பின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது.

அண்மையில் கவிஞர் வைரமுத்து ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் திரைப்படங்களில் பாடல்களின் தேவை தீர்ந்துகொண்டே வருகிறது அல்லது குறைந்துகொண்டே போகிறது.

திரைப்படங்களில் பாடல்கள் திரிந்து போகலாம். ஆனால், தமிழர்களின் வாழ்வில் பாடல்களின் தேவை தீர்ந்து போவதில்லை. பாடல்கள் இல்லாத வாழ்வு ஓசையில்லாத உலகம் போன்றது.

பறவைகள் இல்லாத காடு போன்றது. பாடல்கள் இனிமேல் திரைப்படங்களிலும் இருக்கலாம் அல்லது திரைக்கு வெளியிலும் இருக்கலாம். குயில் வனத்திலும் இருக்கலாம்; வானத்திலும் இருக்கலாம் என்பதுபோல. இப்போதும் சில படங்களில் சில பாடல்கள் அருமையோ அருமை; பல படங்களில் வெறுமையோ வெறுமை என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பெரும்பாலான பாடல்கள் சப்தங்கள் விற்கும் சந்தையாய், பல நேரங்களில் மொழியும் இசையும் வருந்திப் புணரும் வல்லுறவாய், பல பொழுதில் உணர்ச்சியற்ற ஓசைக் கூட்டமாய்க் கழிவது கண்டு தமிழ்ச் சமூகம் காதுகளுக்குக் கதவும் பூட்டும் தயாரித்துக்கொள்கிறது. எம்போன்றோர் மீது தீராப் பழியும் திணிக்கப்படுகிறது. இதை மீட்டெடுக்க வேண்டும் என்று மார்பு துடிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் நான் பெரிதும் மதிக்கும் கலைஞர்களில் என் கைக்கெட்டியவர்களோடு கைகோத்தேன். 100 பாடல்கள் – 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தில் இறங்கியிருக்கிறேன்.

இந்த நூறு பாடல்களுக்கு ‘நாட்படு தேறல்‘ என்று பெயர் வைத்திருக்கிறேன். நாட்படு தேறல் என்பது ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே என் தமிழ்ப் பாட்டி ஒருத்தி தைத்துக் கொடுத்த தங்கச் சொல்லாடல். அதன் பொருள் அறிந்தால் பூரித்துப் போவீர்கள். விரைவில் நாடெங்கும், நாடுகடந்தும் பரிமாறப்படவிருக்கிறது – ‘நாட்படு தேறல்’ எனவும் அறிவித்திருந்தார்.

இந்த நாட்படு தேறல் பாடல் தொகுப்பின் முன்னோட்டம் இன்று மாலை வெளியிடப்பட்டது. கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பக்கத்தில் இந்த முன்னோட்டம் வெளியானது.

அதில், 100 பாடல்களில் 1 பாடலை 3 தலைமுறை பாடகர்களான பி. சுசீலா, சித்ரா, ஹரிணி பாடி உள்ளனர்; இதற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்; இதனை சரண் இயக்கி இருக்கிறார் என்கிற தகவல் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக நாட்படு தேறல் முன்னோட்டம் தொடர்பாக புத்தம் புதிய தரவுகள் இனி தொடர்ந்து வெளியாகும் எனவும் கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here