வெ. 20,700 கோடி இழப்பீடு தரப்பட்டது உண்மையா?

1940ஆம் ஆண்டுகளில் மரண ரயில்வே திட்டத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு 20,700 கோடி (207 பில்லியன்) ரிங்கிட் இழப்பீடாக மலேசிய அரங்ாங்கத்திடம் வழங்கப்பட்டது என்று ஜப்பானிய தூதரகம் தெரிவித்திருக்கிறது. இது உண்மையா என்பதை அன்றைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுதான் தெளிவுபடுத்த வேண்டும். இழப்பீட்டுத் தொகை 20,700 கோடி ரிங்கிட்டா? அதற்கும் கூடுதலானதா அல்லது குறைவானதா? என்பதையும் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அவர் பிரதமராக இருந்தபோது ஜப்பானுடனான வாணிகத்தை அதிகரிப்பதற்காக கிழக்கு நோக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஜப்பானுடன் மிகவும் நெருக்கமானார்.

அக்காலகட்டத்தில்தான் தாய்லாந்து – பர்மா தண்டவாளம் அமைப்பதற்கு (மரண ரயில்வே) ஜப்பானியர்களால் கட்டாய – பலவந்தமாக தொழிலாளர்களாக சேர்க்கப்பட்ட கிட்டத்தட்ட 30,000 மலேசியர்களுக்கு 20,700 கோடி ரிங்கிட் என்று நம்பப்படும் தொகையை இழப்பீடாகப் பகிர்ந்தளிக்கப்படுவதற்காக கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இப்பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு குடும்பமும் 28 லட்சம் முதல் 30 லட்சம் ரிங்கிட் வரை இழப்பீடாகப் பெற்றிருப்பர்.

ஆனால், ஜப்பானியத் தூதரகத்தில் இப்படி ஓர் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதை அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) அரசாங்கம் மூடி மறைத்து விட்டதா என்ற சந்தேகத்தைக் கிளறி விட்டிருக்கிறது.

இந்நாட்டில் வாழ்ந்த – இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சயாமிய – பர்மா மரண ரயில்வே திட்டத்தில் கட்டாயத் தொழிலாளிகளாக பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுபற்றி தெரியுமா? அவர்களுக்கு இந்த உண்மை சொல்லப்பட்டிருகிறதா? என்பதும் தெரியவில்லை.

இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டது உண்மை என்றால், அதனைப் பெறும் சட்டப்பூர்வ உரிமையைப் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்தாம் என்பது நிதர்சன உண்மையாகும்.

உறவுகளிடமிருந்து, தாய் – தந்தையரிடமிருந்து, மனைவி – பிள்ளைகளிடமிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட அந்த ஆத்மாக்கள் சயாமிய- பர்மா ரயில் தண்டவாளத் திட்டத்தில் தாங்க முடியாத கொடுமைகளைச் சுமந்து கொண்டு உயிரை விட்டவர்களும் உண்டு.

தப்பித்தவர்களும் உள்ளனர். ஆனால் அவர்களும் இப்போது உயிரோடு இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

எது எப்படி இருப்பினும், இந்த இழப்பீட்டுத் தொகை தரப்பட்டது என்பது உண்மையானால், அதனை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தராமல் போனது பாவத்திலும் பாவம் பெரும் பாவமாகும்.

1990ஆம் ஆண்டுகளில் இப்பணத்தை ஜப்பானிய அரசாங்கம் மலேசியாவிடம் ஒப்படைத்து விட்டது என்று நம்பப்படுகிறது. அப்படி என்றால் இது மகாதீரின் 22 ஆண்டுகால நிர்வாகத்தில்தான் நடந்திருக்க வேண்டும்.

மகாதீர் இதனை உறுதிப்படுத்துவாரா? எனக்கு ஞாபகம் இல்லை என்று தட்டிக்கழிப்பாரா?

மலேசிய அரசாங்கம் இதன் உண்மைத் தன்மை – நிலையைக் கண்டறிவதற்கு தேசிய விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். உண்மை என்பது உறுதி செய்யப்பட்டால் 20,700 கோடி ரிங்கிட் என்று சொல்லப்படும் அந்த இழப்பீட்டுத் தொகையை மீட்டெடுக்க வேண்டும்.

மலேசிய – ஜப்பானிய அரசாங்கங்கள் இடையிலான பண பட்டுவாடாவுக்கான ஆவணங்கள் இருக்கத்தானே செய்யும். அதனைக் கண்டுபிடித்து விட்டால் உண்மை வெளிவந்து விடும்.

இந்தத் தண்டவாள நிர்மாணிப்பில் உயிரிழந்தவர்கள் போன்று இப்பணமும் மண்ணோடு மண்ணாகப் போய்விடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் களம் இறங்கி உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.

இத்தகவல்களை வெளிக்கொணர்ந்தவர் மசீச, பிகேஆர் கட்சிகளின் உயர் பதவிகளில் இருந்தவர், 1995இல் இருந்து 2004 வரை நீண்ட காலமாக சுகாதார அமைச்சராகவும் இருந்த டத்தோ சுவா ஜுய் மெங்.

இவர் ஜோகூர் மாநிலத்தில் பக்ரி நாடாளுமன்றத் தொகுதியில் 1986 முதல் 2008 வரை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

உண்மை இல்லாமல் இவ்வளவு பெரிய விவகாரத்தை அவர் தொட்டிருக்க மாட்டார்.
உண்மைகள் வெளிவரட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here