–சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வருகை!
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாடு இந்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு சீனா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, “இந்த ஆண்டு கூட்டத்தை நடத்துவதில் இந்தியாவை நாங்கள் ஆதரிக்கிறோம். தகவல் தொடர்பு, உரையாடலை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்தியா, பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுத்துவோம்.
பொருளாதார ஒத்துழைப்பு, அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பு கலாசார பரிமாற்றங்கள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் மாநாடு இருக்கும் என்றார்.
மேலும் இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினை மாநாட்டை பாதிக்காது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் உண்டானது. இதனால் இரு நாடுகளும் படைகளை குவித்தன. எல்லை பிரச்சினை தொடர்பாக ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் தற்போது படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் சீன அதிபரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே சீனா அதிபர் கடந்த 2019- ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரத்தில் மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டு சீனாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.