KLIA வழியாக RM19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு: மலேசியப் பெண் உட்பட 7 பேர் அதிரடி கைது!

சிப்பாங்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) வழியாக 247.8 கிலோகிராம் கஞ்சாவைக் வெளிநாட்டிற்குப் புகுத்த முயன்ற சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 7 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மலேசியப் பெண் ஒருவரும், ஆறு வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

இதுகுறித்துச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், கடந்த ஜூலை 11, 13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கே.எல்.ஐ.ஏ போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவும், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) துணைப் போலீசாரும் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

சந்தேக நபர்களின் பயணப் பெட்டிகளைச் (Luggage) சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 393 கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட 247.8 கிலோகிராம் கஞ்சாவின் சந்தை மதிப்பு RM19.82 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் அனைத்தும் மலேசியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here