மியான்மரில் ராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், ராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.
ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தவும், கைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவி ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க கோரியும் வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகிறார்கள்.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பிந்தையை நிலைமையை அவசர நிலையாக பார்ப்பதாக தெரிவித்துள்ளது. கொடிய வன்முறை போன்ற நிகழ்வுகளால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறுகிறது.
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியாவடி டெலிவிஷன் சேனல், எம்.ஆர்.டி.வி. அரசு டி.வி. சேனல் இரண்டின் கணக்கையும் பேஸ்புக் முடக்கி விட்டது நினைவுகூரத்தக்கது.
தனது மற்றொரு தளமான இன்ஸ்டாகிராமிலும் ராணுவ கணக்குகளை பேஸ்புக் முடக்கி உள்ளது.